தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நடைபெற்ற சோதனையில் 4,100 கோடி அளவுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. நேற்று நடந்த வருமான வரித்துறையினர் சோதனை மூலம் தெரிய வந்த தகவல்களைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கின்றன.
இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களுடன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தென் தமிழ்நாட்டில் அடையாளமாக செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தூத்துக்குடி வந்து வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.
சோதனையின் முடிவில் ரூ. 4,100 கோடி அளவுக்கு முறையாக கணக்கு காட்டவில்லை எனவும், ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.110 கோடிக்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் தகவல் தரவில்லை 10 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தரவில்லை எனவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, நூறு ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. நாடார் வங்கி என்று அழைக்கப்பட்டு வந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு கிளைகள் மட்டுமே இருந்தன. தூத்துக்குடி, மதுரை, சிவகாசி மற்றும் விருதுநகர் பகுதிகளில் செயல்பட்டு வந்த வங்கியின் வாடிக்கையாளர்களும், பங்குதாரர்களும் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.
இந்தியாவில் கிளை அளவிலான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்த ஒரே வங்கி இதுதான். முதல் முதலாக வங்கியின் தலைமையகத்தில் மட்டுமல்ல அனைத்து கிளைகளிலும் கணினிமயமாக்கலை அறிமுகப்படுத்திய முதல் தனியார் துறை வங்கியாகவும் சொல்ல முடியும். 90களின் ஆரம்பத்தில் கடுமையான நெருக்கடியை சந்தித்த வங்கி, அதிலிருந்து மீண்டு வர பத்தாண்டுகள் தேவைப்பட்டன.
இடைப்பட்ட காலத்தில் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்திருக்கிறது. சமீபத்தில் 832 கோடி ரூபாய்க்கு ஐ.பி.ஓ வெளியிடப்போவதாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அறிவித்தது. வங்கியின் அறிவிப்புக்கு தடை விதிக்குமாறு ஆறு பங்குதாரர்கள், பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடினார்கள். ஆனால், அவர்களது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ஐ.பி.ஓ நடைமுறைக்கு வந்தது.
கடந்த காலங்களில் கூட மெர்கண்டைல் வங்கியின் பங்குதாரர்களால் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்து வந்தது. வங்கியின் செயல்பாடுகள் தொடர்பாகவும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருந்திருக்கிறது. 2019ல் ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக வேறொரு காரணத்திற்காகவும் 35 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
புதிய வங்கிக் கிளைகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி தடைவிதிருந்தது. ஆனால், ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு பின்னர் இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் 10 கிளைகளை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தது. ஐ.பி. ஓ வெளியீட்டிற்கு பின்னர் நிலைமை சீராகிவிட்டதாக சொல்லப்பட்டு வந்தது.
வங்கியின் சேர்மன் தொடங்கி பங்குதாரர்களாக இருந்த பலர் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டிருககிறார்கள். அவர்களது சொத்தும் முடக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வங்கியின் பங்குதாரர்களுக்கு நடுவே கருத்து வேறுபாடு இருந்தது. வங்கியை கைப்பற்றுவது தொடர்பாக அசதாரண சூழல் இருந்தபோது, நடிகர் சரத்குமார் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
அ.தி.மு.கவிலும் தி.மு.கவிலும் பல்வேறு பொறுப்புகளை இருந்த சரத்குமார், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். 2006ல் தி.மு.கவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தபோது, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சர்ச்சையில் முதல்வராக இருந்த கருணாநிதி தலையிடவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
தன்னுடைய ரசிகர்கள் தான் தி.மு.கவில் இணைவதை விரும்பவில்லை என்றும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி குறித்த பிரச்னைகளில் தி.மு.க தலைவர் தலையிடாமல் இருந்தது வருத்தமாக இருந்தாகவும், ஆனாலும் கட்சி கட்டுப்பாட்டுக்கு இணங்க அதிருப்தி தெரிவிக்காமல் இருந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.