சிவகங்கை மாவட்டம், கீழடியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு கடந்த மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டது. இதை தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுச் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சிவக்குமார், அவரது மகன் சூர்யா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர் இந்த அருங்காட்சியத்தைப் பார்வையிட இன்று வருகை தந்தனர். இந்த அருங்காட்சியகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் வருகையையொட்டி கீழடி அருங்காட்சியகத்துக்குள் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக அருங்காட்சியகத்தைக் காண காலை 10 மணி முதல் பொது மக்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால் நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகிய மூவரும் காலை 9.30 மணியிலிருந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வந்ததால் பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அருங்காட்சியகத்தைக் காண வந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் அருங்காட்சியகத்தை பார்த்துச் சென்ற பிறகே மற்றவர்கள் அருங்காட்சியகத்தைப் பார்வையிட அனுமதி கொடுக்கப்பட்டது.