ஆதித்யா L1 விண்கலம் தனது கடைசி சுற்றுப்பாதை உயர்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியன் பற்றிய பல உண்மையை வெளிக்கொண்டுவர ஆதித்யா L1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் ஒன்றரை மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தைப் போலவே ஸ்லிங் ஷாட் முறையில் இந்த விண்கலம் சூரியனை நோக்கி பயணிக்க உள்ளது. இதற்காக அதன் நிலை ஒவ்வொரு கட்டமாக உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இந்த விண்கலத்தின் இறுதி சுற்றுப்பாதை உயர்வு வெற்றிகரமாக முடிந்தது. இதைத்தொடர்ந்து வருகிற செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) பூமியின் சுற்றுப்பாதையை நிறைவு செய்து, அதன் இலக்கு புள்ளியை நோக்கி அன்றே செலுத்தப்பட உள்ளது.
இதற்கான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேற்கொள்வார்கள். ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுப்பாதை இறுதியாக உயர்த்தப்பட்ட பின், இப்போது 256 × 121973 கிலோமீட்டர் என்ற சுற்றுப்பாதையில் உள்ளது. இதன் பிறகு இந்த விண்கலம் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை பயணித்து, வேறு எந்த இந்திய விண்கலமும் இதுவரை பயணிக்காத தூரத்தைக் கடந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட புள்ளியில், Halo Orbit எனப்படும் ஒளிவட்டப் பாதையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.
அதன் பின்னர் சூரியனை ஆய்வு செய்யும் பணிகள் அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் சந்திரயான் 3 திட்டத்தை அடுத்து, இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படும்.