ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.கஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளின்போது புகையற்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் காட்சிப்படுத்துவதை தடை செய்வதுடன், அவை தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதையும் தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31-ஆம் நாள் தொடங்கி மே 28-ஆம் நாள் வரை நடைபெற உள்ளன. அவற்றில் ஏப்ரல் 3, 12, 21, 30, மே 6, 10, 14 ஆகிய நாட்களில் சென்னை சேப்பாக்கம் திடலில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதால் அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22ம் தேதியன்று நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா போட்டிகளின் போது புகையற்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் சட்டவிரோதமாக திரையிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தவறு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளின் போது நடைபெறக்கூடாது என்பதற்காகவே இந்த கடிதத்தை எழுதுவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் விளையாட்டு மோகத்தை பயன்படுத்தி, அவர்களிடம் புகையில்லா புகையிலைப் பொருட்கள், விளம்பரங்கள் வழியாக திணிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அவர், COTPA 2003 சட்டத்தின் படியும், மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணை உத்தரவின்படியும் புகையிலை விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.