செய்திகள்

‘எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து பேச வேண்டும்’ அரவிந்த் கெஜ்ரிவால்!

கல்கி டெஸ்க்

நாளை மறுநாள் பிஹார் தலைநகர் பாட்னாவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்ப்பதற்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் அழைப்பு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். இந்தக் கூட்டத்தில், ‘டெல்லி அரசின் நிர்வாக அதிகார மாற்றம் குறித்த மத்திய அரசின் அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிப்பது குறித்து முதல் விஷயமாக தலைவர்கள் விவாதிக்க வேண்டும்’ என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்து தலைவர்களுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், ‘மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் சட்டத்தின் மூலம் மத்திய அரசு டெல்லியில் ஒரு சோதனை முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. அது வெற்றி பெற்றுவிட்டால், பாஜக ஆளாத மாநிலங்களிலும் இதுபோன்ற அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து பட்டியலில் உள்ள மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைப் பறிக்கும். ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பிரதமரே ஆட்சி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக, தலைநகர் டெல்லியில் குரூப்-ஏ அதிகாரிகளை இடம்மாற்றம் மற்றும் பணியமர்த்துவதற்கான ஒரு அதிகார அமைப்பை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு மே 19ம் தேதி கொண்டு வந்தது. இந்தச் சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

இந்த நிலையில், டெல்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ‘டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரை விட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் டெல்லி அரசுக்கே உள்ளது’ என மே 11ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த சில வாரங்களாக பாஜக அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து, இந்த சட்டத்துக்கு எதிராக ஆதரவு திரட்டும் செயலில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT