அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கட்டடங்களில் இருந்து வரும் கழிவு நீரைப் பயன்படுத்தி பீர் தயாரித்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியமடையச் செய்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள Epic Cleantec என்ற நிறுவனம், 40 மாடி கட்டிடம் ஒன்றில் உள்ள சிங், ஷவர் மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரை பீராகத் தயாரித்துள்ளது. உலக அளவில் சுமார் 14 சதவீத குடிநீர் மக்களுடைய பிற தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி பயன் படுத்தப்படும் தண்ணீரை மக்கள் மறுசுழற்சி செய்து பயன்படுத்தாமல் அப்படியே வீணாக்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்காகவே இந்நிறுவனம் இத்தகைய புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
ஆன்சைட் கிரே வாட்டர் என்கிற சிஸ்டத்தைப் பயன்படுத்தி எபிக் கிளீன்டெக் நிறுவனம் பீர் தயாரித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிஸ்டமானது துணி துவைக்க, குளிக்கப் பயன்படுத்தும் நீர் மற்றும் மொட்டை மாடியில் வீணாகும் மழை நீர் ஆகியவற்றை சேகரித்து, வடிகட்டி, அதிலுள்ள கிருமிகள் அனைத்தையும் நீக்கிவிடுகிறது. பின்னர் அந்த நீரைப் பயன்படுத்தியே பீர் தயாரிக்கப்படுகிறது.
தற்போது பின்பற்றப்பட்டு வரும் விதிகளின்படி, மறுசுழற்சி செய்த நீரை பருகும் பானங்களாகப் பயன்படுத்த முடியாது என்ற போதிலும், இந்த பீர் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இதுகுறித்து எபிக் கிளீன்டெக் நிறுவனத்தின் சிஇஓ கூறுகையில், "இதுவரை நாங்கள் 7570 லிட்டர் கழிவு நீரை பயன்படுத்தி சுமார் 7,000 பீர் கேன்கள் வரை தயாரித்துள்ளோம். இதை மக்களிடம் விற்பதற்காக அல்லாமல், ஒரு வித்தியாசமான முயற்சியாகவே கருதுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பீர் ப்ராஜெக்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே துவங்கப்பட்டது. இந்த பீர் குடிநீரை விட மிகுந்த பாதுகாப்பானது என அந்நிறுவன சிஇஓ கூறுகிறார். இவர்களின் இந்த புதிய முயற்சி அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுவதோடு மட்டுமின்றி, அனைவரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
ஒருவேளை எதிர்காலத்தில் அதிகப்படியான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டானால், இப்படிப்பட்ட மறுசுழற்சி செய்யும் திட்டம் நிச்சயம் அனைவருக்கும் பயன்படும் விதமாக அமையும் என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.