செய்திகள்

அமேசான் காட்டில் உயிர் பிழைத்த சிறுவர்கள். தாய் சொன்ன கடைசி வார்த்தை!

கிரி கணபதி

டந்த மே 1ம் தேதி கொலம்பியாவிலிருந்து, San Jose Guaviare என்ற இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம், அமேசான் பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பைலட், நான்கு குழந்தைகள் மற்றும் அக்குழந்தைகளின் தாய் உள்ளிட்டோர் பயணம் செய்தனர். 

விபத்துக்குள்ளானதும் அந்த இடத்திற்கு விரைந்து சென்ற இராணுவத்தினர், அங்கே உயிரிழந்த மூவரின் உடலைக் கைப்பற்றி காணாமல் போன குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலில் குழந்தைகள் விபத்திலிருந்து உயிர் பிழைத்து அமேசான் காடு களுக்குள்ளே சென்றிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் விபத்து நடந்த பகுதியில் குழந்தைகள் பயன்படுத்திய பொருட்களும் அவர்களின் காலடித் தடங்கலும் தென்பட்டன. 

உயிர் தப்பிய குழந்தைகள் 'ஹுய்டோட்டோ' பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு காடுகளைப் பற்றி நன்கு தெரியும். எனவே அவர்கள் உயிர்ப்பிழைத்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என அந்த சமூக மக்கள் கூறினர். இதையடுத்து அந்த சமூக மக்களுடன் சேர்ந்து, தேடுதல் வேட்டையில் இறங்கியது கொலம்பியா ராணுவம். சுமார் ஒரு மாதத்திற்கு மேலான தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடந்த ஜூன் 9ம் தேதி 4 குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்டனர். 

இவர்களை உயிருடன் மீட்பதற்கு ராணுவத்தினர் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஹெலிகாப்டரிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசியுள்ளனர். மேலும் அச்சிறுவர்களின் தாத்தா பாட்டி சொல்லி அனுப்பிய தகவலையும் ஹெலிகாப்டரிலிருந்து ஒலிபெருக்கி வாயிலாகக் கூறியிருக்கிறார்கள். காட்டுக்குள் எப்படி வாழ வேண்டும்?, காயம்பட்டால் எப்படி மருந்து போடுவது? பூச்சிக்கடியில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? போன்ற இயற்கையோடு இணைந்து வாழும் அனைத்து விஷயங்களையும் தாத்தா பாட்டி இச்சிறுவர்களுக்குக் கற்றுத் தந்துள்ளனர். 

மேலும் காட்டுக்குள் பிரிந்து சென்றுவிடாமல் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கும்படி பாட்டி சொன்ன தகவலை மீண்டும் மீண்டும் ஹெலிகாப்டரிலிருந்து ஒளிபரப்பி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் ராணுவத்தினர். இதன் காரணமாகவே சுமார் 40 நாட்களுக்குப் பிறகு 11 மாத குழந்தை உட்பட நான்கு சகோதரர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

மீட்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்கள் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, அடர்ந்த அமேசான் காட்டில் குழந்தைகளை மீட்டது பற்றியும், குழந்தைகளை முதலில் கண்டதும் அவர்கள் நடந்து கொண்ட விதம் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். 

நான்கு குழந்தைகளில் மூத்த மகளான லெஸ்சி தன் இளைய சகோதரனை கையில் ஏந்தியபடி வேகமாக ராணுவத்தினரிடம் ஓடிவந்து "எனக்கு ரொம்ப பசிக்கிறது" என்று சொல்லி இருக்கிறார். இரண்டு மகன்களில் சோர்வாகப் படுத்திருந்த சிறுவன் எழுந்து வந்து, மீட்பு பணிக்கு வந்தவர்களிடம் "எங்கள் அம்மா இறந்து விட்டார்" என சோகம் நிறைந்த முகத்துடன் கூறி இருக்கிறான். பின்னர் ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக, "உங்களின் அப்பாவும் மாமாவும்தான் எங்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்" எனக் கூறியிருக்கின்றனர். 

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்குழந்தைகளின் தந்தை, "விபத்து நடந்து நான்கு நாட்கள் வரை அம்மா உயிருடன் இருந்தார்கள்" என 13 வயதான என் மூத்த மகள் என்னிடம் கூறினாள். மேலும் என் மனைவி இறப்பதற்கு முன்பாக குழந்தைகளிடம் "முதலில் இங்கிருந்து சென்று விடுங்கள். நான் உங்களிடம் காட்டிய அதே அன்பை இனி அப்பா உங்களுக்குத் தருவார்" என்று கடைசியாக சொல்லி இருக்கிறார் என உருக்கமாகப் பேசியுள்ளார். 

அடர்ந்த காட்டுப்பகுதியான அமேசான் காட்டிற்குள் எப்படி இந்த நான்கு சிறுவர்களும் 40 நாட்கள் உயிருடன் இருந்தார்கள் என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவர்களுக்கு இயல்பாகவே இயற்கையுடன் எப்படி வாழ்வது என்ற நுணுக்கங்கள் தெரிந்திருந்தாலும், விமானம் நொறுங்கி விழுந்த இடத்திலிருந்து மரவள்ளிக்கிழங்கு மாவு, காட்டு விதைகள், வேர்கள் போன்றவற்றை 40 நாட்கள் உண்டு சிறுவர்கள் உயிர்பிழைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT