இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடப்பாண்டு முதல், வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
திரைப்படம், ஆவணப்படத்தை தொடர்ந்து அந்த வரிசையில் தற்போது வெப்சீரிஸ் ட்ரெண்டாகி வருகிறது. வெப்சீரிஸ்க்கு பலரும் தற்போது அடிக்ட் ஆகி கொண்டே வருகிறார்கள் என சொல்லலாம். சமீபத்தில் தமிழில் வெளியான சுழல், லைவ் கேஸ்ட், வதந்தி உள்ளிட்ட த்ரில்லர் வெப்சீரிஸ் டாப்ரேட்டிங்கில் உள்ளது. இது போக மற்ற மொழி வெப்சீரிஸ் கூட பலரையும் கவர்ந்து வருகிறது. பலரின் விருப்பத்தை பெறுவதால் வெப்சீரிஸுக்கும் விருது வழங்கலாமே என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்த பரிசீலனை இன்று வெற்றியடைந்துள்ளது.
கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், முதன் முறையாக நடப்பாண்டு முதல், சிறந்த வெப் சீரிஸிக்கான விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு, ஓ.டி.டி.யில் வெளியான அசலான இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம், ஓ.டி.டி. தளத்தை மேம்படுத்தவும், திறமைகளை ஊக்குவிக்கவும் இம்முயற்சியை அரசு முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கான படங்களை சமர்ப்பிப்பதற்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடைசி நாளாகும். இது குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்.