சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையம்-விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதை நம்பிச் சென்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பிறகே வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு காரணமாக, இன்று காலை பணிக்கு சென்ற பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயிலில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் தற்போது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பணிக்கு செல்லும் பயணிகளுக்கு மிக வசதியாகவும் விரைவாகவும் பயணிக்க பெரிதும் உதவி வருகிறது இந்த மெட்ரோ ரயில்கள். தற்போது இந்த ரயில்கள் அரை மணி நேரத்திற்கு ஒன்று என்கிற அளவில் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், அதில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே இன்று காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.