டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் , டெல்லி போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது.
நேற்று மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், முன்னாள் தடகள வீராங்கனையுமான பி. டி. உஷா நேரில் சந்தித்தார். அவர்களிடம் கலந்துரையாடிய அவர் , போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், அவர்களுக்கு நீதி கிடைக்க உதவுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷன் சிறை செல்லும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
இன்று ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீஸ் சீருடையில் வந்த சிலர் தங்களை தாக்கியதாக, மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 11 நாட்களாக இவர்கள் அமைதியான போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று தள்ளு முள்ளு ஏற்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.