ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ், ஆப்பிள், கூகுள், மெட்டா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் இணைய உள்ளடக்க விதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் துணை நிறுவனங்கள், மெட்டா நிறுவனத்தின் இரண்டு யூனிட்டுகள், ஆப்பிள் ஆப் ஸ்டோர், அலி எக்ஸ்பிரஸ், ட்விட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 19 தளங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு ஐரோப்பிய ஒன்றியம் அடையாளம் கண்டுள்ளது. இந்த விதிகள் டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதி?
உள்ளடக்க விதிகளின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, சட்ட விரோதமாக அல்லது பிறருக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் வேகமாக நீக்குவதற்கான புதிய நடைமுறைகளை சேர்க்க வேண்டும். அதேபோல பயனர்களின் உள்ளடக்கத்தை அகற்றும் கொள்கையானது, எப்படி செயல்படுகிறது என்பதையும் விலாவாரியாக நிறுவனங்கள் விளக்க வேண்டும். இவை அனைத்தும் ஐரோப்பிய ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில், இந்த புதிய சட்டத்தின் தேவைகள் மற்றும் அமலாக்கமானது செயல்படுத்தப்படும்.
இந்த சட்டத்தால், ஆன்லைன் தளங்களில் பயனர்களின் விளம்பரங்களை எளிதாக கண்டுபிடித்து, அதை யார் வழங்குகிறார்கள் அல்லது யார் பணத்தை செலுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். மேலும் சிறுவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளம்பரங்களை காட்டக்கூடாது அல்லது ஒருவரின் தனிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் விளம்பரங்களை அந்த நபருக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடாது.
இந்தியாவின் ஆன்லைன் சட்டம்:
இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் 2021ம் ஆண்டு சமூகம் ஊடக தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்களை செய்து, டிவிட்டர் மற்றும் மெட்டா போன்ற பெரிய சமூக ஊடகங்களின் உள்ளடக்க விதிகளில் சில மாற்றங்களை செய்தது.
பயனர் குறைகளை நிவர்த்தி செய்ய முக்கிய பணியாளர்களை நியமித்தல், சில நிபந்தனைகளின் கீழ், ஏதேனும் தவறான உள்ளடக்கம் பதிவிடப்பட்டிருந்தால் அதை முதலில் யார் உருவாக்கினார் என்பதை அடையாளம் காணுதல் மற்றும் சில உள்ளடக்கங்களை அடையாளம் காண தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை பயனருக்கு வழங்குவது போன்றவையும் இதில் அடங்கும்.
இந்தியாவின் ஐடி விதிகளிலுள்ள சில விதிகளுக்கு நிறுவனங்கள் தரப்பில் எதிர்ப்பு இருந்து வந்தது. வாட்ஸ் அப் நிறுவனம் தரப்பில், முதலில் ஒரு செய்தியை யார் அனுப்பினார் என்பதை அறியும் விதியை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறார் பாலியல் குற்றங்களுக்கு சமூக ஊடகங்களின் பங்கு குறித்தும் சில விதிகள் கூறப்பட்டிருக்கிறது.
நாளுக்கு நாள் சமூக ஊடகத்தின் தாக்கம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் இருப்பதால், அதில் இதுபோன்ற சில சட்ட முன்னேற்பாடுகளை அரசாங்கம் எடுப்பது நல்ல விஷயம் தான். இருப்பினும் சட்ட விதிகளைத் தாண்டி, நாம் நமக்கு ஏற்ற வகையில் சமூக ஊடகங்களை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.