கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முதியோரும், இணை நோய் உள்ளவர்களும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்காதவர்கள், நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள், புற்றுநோயாளிகள் போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸை உடலில் ஒட்டிக் கொள்ளும் செல்கள் அதிகமாக இருக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுதும் நேற்று ஒரே நாளில், 11 ஆயிரத்து 109 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர், 29 பேர் உயிரிழந்துள்ளனர். 49 ஆயிரத்து 622 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 5.01 சதவீதமாக உயர்ந்து உள்ளது. தொற்று பரவல் திடீர் வேகம் எடுத்திருப்பது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தினமும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்.கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் துவங்கியுள்ளது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது பரவி வரும் உருமாறிய புதிய வகை வைரஸ், இரண்டாம் அலைக்கு காரணமான, 'டெல்டா' வைரசை போல ஆபத்தை ஏற்படுத்துமா என்பது உட்பட தொற்று அதிகரிப்புக்கான காரணங்களை டாக்டர்களும்,நிபுணர் குழுவும் வரிசைபடுத்தி உள்ளனர்.
தற்போது பரவி வரும் கொரோனா தீவிரமானது அல்ல என்று கூறப்பட்டாலும் இணை நோய் கொண்டவர்களுக்கும் முதியவர்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையே இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.
கொரோனா வைரஸ் கடந்த மூன்று வருடங்களில் பல உருமாற்றங்கள் அடைந்துள்ளன. அதில், டெல்டா என்ற உருமாறிய வைரஸ் தான் உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது பரவும் XBB 1.16 வகை கொரோனா வீரியம் குறைந்தது தான். ஆனால் அனைவருக்கும் அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள்.