செய்திகள்

இனவிருத்திக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து பாம்புப் பண்ணைக்குச் செல்லும் முதலை!

கார்த்திகா வாசுதேவன்

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து கரியல் வகை ஆண் முதலை ஒன்று இனப்பெருக்கத்திற்காக சென்னை பாம்பு பண்ணைக்கு வழங்கப் பட்டது.

அழிந்து வரும் கரியல் வகை முதலை இனங்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக, இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (CZAI) பரிந்துரைத்த 'இனப்பெருக்கக் கடன்' திட்டத்தின் கீழ், இந்த பரிமாற்றம் நிகழ்ந்ததாக பாம்பு பண்ணை செயல் தலைவர் எஸ் பால்ராஜ் கூறினார்.

மேலும் இது குறித்துப் பேசுகையில்,

“வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிற முதலைகளால் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு ஆண் முதலை உட்பட, இந்த வசதிக்காகவே மொத்தம் ஆறு கரியல் வகை முதலைகள் (காவியலிஸ் கங்கேடிகஸ்) இருந்தன. இறந்த ஆண் கரியல் வகை முதலையும் கூட 32 குட்டி முதலைகளுக்குத் தந்தையான பிறகே சண்டையில் இறந்தது. அதன் மூலம் முட்டையிடும் தன்மையைப் பெற்ற பெண் முதலை பாம்பு பூங்காவில் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யத் தகுந்த முட்டைகளை இட்டது. அழிந்து வரும் இந்த இனத்தின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவே, இனப்பெருக்கம் செய்யும் தகுதி கொண்ட ஆண் முதலையை கடனாகப் பெற முடிவு செய்தோம். வண்டலூர் உயிரியல் பூங்காவில் இத்தகைய முதலைகள் அதிகம் உள்ளன.” - என்றார் அவர்.

இந்த திட்டத்தின் கீழ், பாம்பு பூங்கா ஆண் முதலைகளை சுமார் ஒரு வருடம் வைத்திருக்கும். இனப்பெருக்கத்திற்குப் பிறகு, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குஞ்சு பொரித்த முதலைகளில் 50% கிடைக்கும், மீதமுள்ளவை பாம்பு பூங்காவில் இருக்கும். கரியலின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை ஆகும்.

ஆண் கரியல் முதலை ஆரம்பத்தில் ஒரு தனி அறையில் வைக்கப்பட்டு, பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஐந்து பெண் முதலைகள் வசிக்கும் அடைப்புக்குள் விடுவிக்கப்படும். அங்கேயும் உடனடியாக அது பெண் முதலைகளுடன் கலக்க அனுமதிக்கப்படாது. பெண் முதலைகளுக்கும், ஆண் முதலைகளுக்கும் ஒரு விதமான இணக்கத்தன்மை வளரும் போது மட்டுமே அடைப்பு திறக்கப்படும் அளவிலான ஒரு பொதுவான திறப்பு இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

கடந்த ஓராண்டில் பூங்காவில் குஞ்சு பொரித்த 32 முதலைகளில், 2 முதலைக் குட்டிகள் பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட மீதமுள்ள 30 குட்டிகள் நன்றாக வளர்ந்து வருவதாக பால்ராஜ் தெரிவித்தார்.

சமீபத்தில், குஜராத்தில் உள்ள தனியார் உயிரியல் பூங்கா ஒன்று, பாம்பு பூங்கா அதிகாரிகளிடம் 10 குட்டிகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி கூறியதாவது: மைசூர் விலங்கியல் பூங்கா மற்றும் திருவனந்தபுரம் மிருகக்காட்சிசாலைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 'இனப்பெருக்க கடன்' திட்டத்தின் கீழ், சிங்கவால் மக்காவ்களை உயிரியல் பூங்கா வழங்கியது என்று தெரிவித்தார்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை பாம்பு பூங்காவில் 20 வகையான இந்திய பாம்புகள், மூன்று வகையான இந்திய முதலைகள், இரண்டு வகையான அயல்நாட்டு முதலைகள், மூன்று வகையான இந்திய ஆமைகள், நான்கு வகையான இந்திய பல்லிகள் மற்றும் இரண்டு வகையான அயல்நாட்டு ஊர்வன வகை விலங்குகள் உள்ளன.

இது தெரிஞ்சா முட்டையை தலையில் தடவ மாட்டீங்க! 

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

SCROLL FOR NEXT