ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. .
அதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் தங்கள்து வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளன. அதேபோல், சில கட்சிகள் தேர்தலில் களம் காணவில்லை. குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் தேர்தலில் போட்டியில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த வாரம் திங்கட் கிழமை 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல மூத்த திமுக பிரமுகர்கள் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அது மட்டுமின்றி ஏற்கனவே 13 அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர ஓட்டு வேட்டை ஆடி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
நேற்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசும்போது,
‘‘சின்னம், கொடி , கட்சி எல்லாம் தாண்டியது தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்தற்கு பல சான்றுகள் இருக்கிறது. இன்று இந்தியாவிலும் அது நடந்து கொண்டு இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன்.
என் பயணத்தை பாருங்கள் எனது பாதை புரியும். பல விமர்சனங்களை கடந்து, சரியான பாதை என்று தான் வந்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்கோ, ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதற்கு என் ஆதரவை கொடுக்க வேண்டியது இந்தியனாக என் கடமை. நாம் கட்சிக்காக என்பதை விட அறத்தின் சார்பாக வாக்களிக்க போகிறோம் என நினைத்து கொள்ளுங்கள்.’’ என அவர் கூறினார்.