தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த மாதம் 1-ந்தேதி கொண்டு வரப்பட்டது. அதன் படி, 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ந்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்பதல் அளிக்காத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. கடிதம் எழுதினார். கடந்த 24-ந்தேதி காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு விளக்க கடிதத்தை அனுப்பி வைத்தது.
அதன்பின்னர் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் தானாகவே காலாவதி ஆகிவிடும். இந்தநிலையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர், தமிழக சட்டசபை கடந்த மாதம் 17-ந் தேதி கூடியது. நேற்றுடன் 6 வாரங்கள் முடிந்துவிட்டது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியாகி உள்ளது.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டதிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அன்புமணி ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம், அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213 (2) (ஏ)-ன்படி சட்டப்பேரவை கூடிய நாளிலிருந்து ஆறு வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அக்டோபர் 17-ம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் ஆறு வாரங்கள் நிறைவடைவதால் அவசர சட்டம் காலாவதியாகிறது என்றது குறிப்பிடத்தக்கது.