தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை கேள்வி நேரத்துடன் தொடங்கிய சட்டசபை நிகழ்வுகளைத் தொடர்ந்து 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், "மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு இந்த திராவிட மாடல் அரசு, மரியாதை செய்யும் மகத்தான அறிவிப்பை வழங்குகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார்கள். தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். தலைவர் கருணாநிதியை சொந்த சகோதரனைப் போல மதித்தார்கள்.
சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அளித்த ஊக்கத்தின், உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூக நீதிப் பார்வையில், சமூக நீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும்" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.