நமக்குத் தேவை என்றால் நாம்தான் செயலில் இறங்க வேண்டும். தங்கள் ஊர்க் குளத்தை தூர் வாரிய மக்களைப் பற்றிய செய்திகளைப் பார்த்திருப்போம். அப்படித்தான் நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள மலையில் வசிக்கும் மக்கள் தங்கள் தேவைக்காக 800 கிலோ எடையுள்ள ட்ரான்ஸ்பார்மரை தங்கள் தோளில் சுமந்து மலைக்கு சென்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போதமலையில் கீழூர் மேலூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த மலைப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் அங்கு அமைக்கப்பட்ட ட்ரான்ஸ்ஃபார்மரில் (மின் மாற்றி) பழுது ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக மின் விநியோகம் இன்றி மக்கள் தவித்து வந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் புதுப்பட்டி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் பழுதடைந்த டிரான்ஸ்ஃபார்மரை மலைப்பகுதியில் இருந்து கீழே கொண்டு வருமாறு தெரிவிக்க அதன்படி மூங்கில் கம்புகளால் தாங்கல் உருவாக்கி அதன் மீது டிரான்ஸ்ஃபார்மரை வைத்து 20க்கும் மேற்பட்டோர் தோளில் சுமந்து போதமலை அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அடிவாரத்தில் வைக்கப்பட்ட பழைய டிரான்ஸ்பார்மரை கொண்டு சென்ற மின்வாரிய ஊழியர்கள் அலுவலகத்தில் ஒப்படைத்து புது டிரான்ஸ்ஃபார்மரை கடந்த 20ஆம் தேதி போதமலை அடிவாரத்திற்கு மீண்டும் கொண்டு வந்து வைத்தனர்.
டிரான்ஸ்பார்மரை வைத்து 15 நாட்கள் ஆன நிலையில் மின்சாரம் இன்றித் தவித்த மக்கள் மேலும் தாமதமாவதை தடுக்க முடிவு செய்து டிரான்ஸ்ஃபார்மரை மேலே கொண்டுவர ஆயத்தமாகினர். அதன்படி நேற்று 800 கிலோ எடை கொண்ட டிரான்ஸ்ஃபார்மரை மலை கிராம மக்கள் 20க்கும் மேற்பட்டோர் தோள் சுமையாக மலைப்பகுதிக்கு தூக்கிச் சென்றனர். மேலூர் கிராமத்திற்குச் செல்ல ஏழு கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்பதால். அடிவாரத்தில் இருந்து தலா 20 பேர் மீதம் முறை வைத்து கரடு முரடான பாதை வழியாக டிரான்ஸ்ஃபார்மரை சுமந்து சென்றனர்.
இதற்காக தினமும் காலையில் டிரான்ஸ்பார்மரை சுமந்து செல்பவர்கள் மதியம் வெயில் அதிகரிக்கும் நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இறக்கி வைத்து விடுகின்றனர். வெயில் சென்ற பிறகு அடுத்த 20 பேர் டிரான்ஸ்ஃபார்மர் சுமந்து செல்கின்றனர். இருட்டிய பிறகு தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்லும் மக்கள் மறுநாள் காலை மீண்டும் வந்து அதனை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு அடிவாரத்தில் இருந்து கிராமத்திற்கு ட்ரான்ஸ்ஃபார்மரை கொண்டு செல்ல மூன்று நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக கணம் கொண்ட ட்ரான்ஸ்ஃபார்மரை வாகனத்தில் கொண்டு செல்லும் வசதிகள் இல்லாத நிலையில் மக்களே அதைத் தங்கள் தோளில் சுமந்து செல்வதைப் பார்த்து மற்றப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பாராட்டுகின்றனர்
ஆனால் இது போன்ற நெருக்கடியான சமயங்களில் இதற்கு என்ன தீர்வு என்று அரசு சிந்தித்து அதன்படி வசதிகளைத் தந்தால் மக்களுக்கு நல்லது.