தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் வாகனப் புகை காரணமாக நகர்ப்புறங்களில் காற்றின் மாசு அதிகரித்து வருகிறது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாக காற்று மாசு உள்ளது. காற்று மாசு காரணமாக ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள், இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இது குறைந்த வயதிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. உலக அளவில் ஆண்டுக்கு 42 லட்சம் பேர் காற்று மாசுவால் ஏற்படும் நோய்களால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரோ கிராம் அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு மைக்ரோ கிராம் உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப்படுகிறது. 2.5 மைக்ரோ கிராம் அளவுள்ள துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம் வரை இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவு மாசுவாகும்.
சென்னையில் மணலி பகுதியில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைத்துள்ள காற்று மாசு கண்காணிப்பு மையத்தில் கடந்த ஆண்டு பதிவான அளவுகளின்படி, இது சராசரியாக 362 மைக்ரோ கிராமாகவும், அதிகபட்சமாக 500 மைக்ரோ கிராமாகவும் பதிவாகி இருந்தது.
சென்னையில் பல்வேறு சாலைகளில் இயக்கப்படும் வாகனங்களில் பல, புகையை கக்கியபடி செல்கின்றன. சாலைகளில் ஓரங்களில் படிந்து கிடக்கும் மண்ணும் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் சாலையில் புழுதி பறக்கிறது. இதன் காரணமாக சாலையில் செல்லும் குழந்தைகள், இளம் வயதிலேயே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கும் அபாயம் இருப்பதாக நுரையீரல் நோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல இடங்களில் காற்று மாசு அதிகரிப்பது தெரியவந்ததால், அந்த விவரங்களை ஆன்லைனில் வெளியிடுவதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. காற்று மாசுவால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசும் எந்த ஆய்வையும் நடத்தவில்லை.
அதனால், காற்று மாசுவை தடுக்கும் விதமாக காண்காணிப்பையும், மாசு ஏற்படுத்துவோர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தி, காற்று மாசுவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.