இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன்(98) வயது முப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11.20 மணிக்கு அவர் காலமானார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு துறைகளில் மேம்பாடு பெறுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் இந்திய வேளாண் துறை மிகவும் பின்தங்கி இருந்தது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன.
குறிப்பாக, 1960-ம் ஆண்டு முதல் 1980ம் கால கட்டங்களில் இந்தியாவின் உணவுத்தேவைக்கு அண்டை நாடுகளிடம் கையேந்தக் கூடிய நிலையை மாற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. உணவுத் தேவையில் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப் புரட்சி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
அப்போது மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுகால கட்டத்திலும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியபோது உணவுத் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப்புரட்சி என்ற இந்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனை முன்னெடுத்து சென்றவர் தமிழகத்தை சேர்ந்த பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். அவர் அந்த பணிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமும், அறக்கட்டளை மூலமாகவும், வேளாண்துறைக்கு பெரும் பங்காற்றினார்.
பசுமை புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார். நாட்டில் பஞ்சம் போன்ற காலங்களில் விவசாயிகள் மற்றும் அரசின் கொள்கைகளுடன் இணைந்து, பிற விஞ்ஞானிகள் உதவியுடன் ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்தினார். அவர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றி உள்ளார்.40-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இவருடைய மகள் சவும்யா சுவாமிநாதனும் விஞ்ஞானியாக உள்ளார். அவருடைய மறைவு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மக்களுக்கும் வேதனை ஏற்படுத்தி உள்ளது.