காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாதவர்களுக்கு விரைவில் ரூ.1000 அபராதம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு திரும்பிக் கொண்டிருந்த டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் கார் விபத்துக்குள்ளாகி, அவர் பலியானார். சைரஸ் மிஸ்திரி காரின் பின்னிருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் அணியாததாலேயே மரணம் அடைந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கட்கரி தெரிவித்ததாவது:
காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. ஆனால் மக்கள் யாரும் அதனைப் பின்பற்றுவதில்லை.
இனிமேல் முன் இருக்கையில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலிப்பதுபோல் பின் இருக்கையில் உள்ளவர்களும் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலிக்கும் வகையில் கார்கள் வடிவமைக்கப்படும்.அதையும் மீறி சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும். இது விரைவில் அமல்படுத்தப் படும்.
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.