மெட்ராஸ் ஐ தொற்று பரவல் அதிகமாக பரவி வரும் நிலையில் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செப்டம்பர் தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் பரவல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. வைரஸ் தாக்குதல் மூலமாக மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் கண்ணில் உறுத்தல் மூலமாகவும், சிவப்பு நிறமாக கண் மாறுதல் போன்ற அறிகுறிகள் மூலமாக கண்டறியப்படுகிறது.
இந்த ஆண்டும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் பாதிப்பு கூடுதலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள். டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு இதன் நோய் பாதிப்பு நீங்கிவிடும்.
நோய் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, அலுவலகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் சுய சிகிச்சை செய்யக்கூடாது. முறையான கண் மருத்துவர் அணுகி அவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கையினால் தொடக்கூடாது. அப்படி தொட்டு விட்டு அருகே இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் இந்த நோய் பரவும். இது எளிதில் பரவக்கூடிய நோய் பாதிப்பாகும்.
மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை போட்டுக் கொள்ளக்கூடாது. மெட்ராஸ் ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சென்னையில் கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்கள் இருக்கிறது. எழும்பூர் கண் மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் உள்ளிட்ட பத்து இடங்களில் கண் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது