செய்திகள்

‘அரசுக்கு சேர வேண்டிய வாடகையை வசூலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை’ சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கல்கி டெஸ்க்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான வணிக வளாகக் கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அதனை இடித்துவிட்டு, அங்கு புதிதாக வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதனையடுத்து, அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி கடைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இதனை எதிர்த்து, அந்த வணிக வளாகத்தில் கடை நடத்திவரும் அஷ்வக் அகமது மற்றும் பவன்குமார் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘மேற்சொன்ன கட்டடம் சேதமடையவில்லை. மேலும், முறையாக வாடகை செலுத்தி வருகிறோம். அதனால் கடைகளை காலி செய்யக் கூறி அனுப்பப்பட்டு இருக்கும் நோட்டீசை இந்த கோர்ட் ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஓசூர் சார் ஆட்சியர் தரப்பில், ‘மனுதாரர்கள் இருவரும் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக அந்த வணிக வளாகத்தில் கடை நடத்தி வருகிறார்கள். மேலும், இவர்கள் முறையாக வாடகை செலுத்துவதில்லை’ என்று கூறப்பட்டது.

அதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கட்டடம் சேதமடைந்திருக்கும் நிலையில் அங்கு கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல. மனுதாரர்கள் இருவரும் சட்டவிரோதமாக முப்பது ஆண்டுகள் அங்கு கடைகளை நடத்தி வருவதால், சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீஸில் எந்தப் பிழையும் இல்லை’ என்று கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, ‘அரசின் வருவாயை பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. குத்தகை சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT