கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2ம் தேதி ஹவுராவில் இருந்து ஜல்பைகுரிக்கு இந்த வந்தே பாரத் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயில் மால்டா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் ரயிலின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதேபோல் மறுபடியும் 3ம் தேதியும் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
இச்செய்திகள் மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “பிஹாரில் இந்த சம்பவம் நடந்ததாகவும், வந்தே பாரத் ரயில் இன்னும் பிஹார் மக்களுக்கு கிடைக்காததால், சிலர் இதுபோல சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். பிஹார் அரசு பாஜகவுடன் கூட்டணியில் இல்லாததால், அம்மாநிலத்திற்கு ரயில் கிடைக்கவில்லை” என்றும் கூறினார்.
மேலும் கூறுகையில், போலிச் செய்திகளைக் காட்டி சில தொலைக்காட்சி சேனல்கள் மேற்கு வங்காளத்திற்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக இவ்வாறு நடந்து வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும். இவ்வாறு அவதூறு பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர், வந்தே பாரத் ரெயிலில் பெரிய சிறப்பு எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ ஏகலப்ய சக்ரவர்த்தி கூறியபோது, “கல்வீச்சு தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளை ஸ்கேன் செய்து பார்த்ததில், முதல் சம்பவம் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திலும், இரண்டாவது சம்பவம் பிஹாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்திலும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளைப் பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன'' எனவும் தெரிவித்துள்ளார்.