தமிழ்நாடு அரசின் மூலம் பல தொழில்களுக்கு முக்கியமாக விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. தகுந்த மானியம் அளிப்பதன் மூலம் தொழில் வளர்ச்சிகள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வருவதை அறிவோம். அவ்வகையில் நம் நாட்டின் முக்கியத் தொழிலாக விளங்கும் மீன் வளர்ப்பிற்கு தமிழ்நாடு அரசின் மூலம் உள்ளீட்டு மானியம் வழங்குதல். புதிய பண்ணை குட்டைகள் அமைத்து மீன் வளர்ப்பை ஊக்குவித்தல், பயோ பிளாக் முறையில் மீன் வளர்த்தல், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விரால் மீன் வளர்ப்பதற்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நுண்மீன் குஞ்சுகளை விரலிகளாக வளர்த் தெடுக்கும் பண்ணை குட்டைகள் அமைத்தல், மீன் குளங்கள் அமைத்து மீன் குஞ்சுகளை வளர்க்கும் முறைகள், மீன் குஞ்சுகளுக்கு உணவிடும் முறைகள், பயோ பிளாக் முறையில் மீன் வளர்த்தல் போன்ற மீன் வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீன் வளர்ப்பினைப் படுத்தி மானியம் அடங்கும் திட்டத்தில் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் புதிய பண்ணை குட்டை அமைத்திட ஆறு பயனாளி களுக்கு 6 லட்சத்து 20ஆயிரம் மானியம் உள்ளிட்ட மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள பலருக்கும் பல வகை மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மானியங்கள் வழங்கப் பட்டுள்ளது. பல்நோக்குப் பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பை மேம்படுத்த ஏதுவாக மீன் குஞ்சு, தீவனம், உரங்கள், பண்ணைப் பொருள்கள், மீன்கள் வளர்ப்பிற்கான உள்ளீட்டுப் பொருகள் ஐம்பது சவிகிதம் மானியத்தில் ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூபாய் 18,000 வீதம் ஆறு பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து எட்டாயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அரசு மீன் பண்ணையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன் குஞ்சுகள். 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன .மேலும் 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டுர் அணையில் மீன் உற்பத்தியைப் பெருக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளன இந்தத் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆட்சியர் அளித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.