சென்னையின் முக்கிய ஹாட் ஸ்பாடாக உள்ளது தியாகராய நகர். தி நகர் என்று சொன்னாலே சென்னையில் வசிக்கும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடைகள் தான். பண்டிகைகளில் தொடங்கி வீட்டு விசேஷம் வரை அனைவருக்கும் ஒரே தேர்வாக அமைந்தது திநகர் தான். அதற்கு முக்கிய காரணம், அங்கு இயங்கும் புகழ் பெற்ற பெரிய பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் மற்றும் காய்கறி கடைகள் என்று மொத்த வணிகமும் நடைபெறும் இடமாக திகழ்வதே.
அனைத்து தரப்பு மக்களும் வந்து போகும் இடம் என்பதால் பெரிய கடைகளில் அதிக விலையில் விற்கப்படும் பொருட்களை சில நபர்களால் வாங்க இயலாது. அதை ஈடுகட்டவே அந்தந்த கடைகளுக்கு அருகே சாலை ஓரத்தில் சிறு சிறு வியாபாரிகள் தற்காலிக கடைபோட ஆரம்பித்தனர். இதனால் பெரிய கடையில் ஏசி போட்டு விற்கப்படும் துணிகள் அதே டிசைனில் வெளியே உள்ள சாலையோர கடைகளில் பாதி விலையில் கிடைக்க வாய்ப்பு உருவானது. தரத்தில் வேறுபட்டாலும் பார்ப்பதற்கு அச்சுஅசல் ஒரே மாதிரி இருப்பதால் மக்கள் அதை வாங்கிக் குவிய தொடங்கினர். இதுவே அந்த பகுதியில் நிறைய சாலையோர கடைகள் வருவதற்கு காரணமானது. ஆனால் அதுவே காலப்போக்கில் போக்குவரத்திற்கும் இடையூறாக அமைந்தது. வார இறுதியில் காவலர்கள் ரோந்து வாகனத்தில் வந்து குரல் கொடுத்து மிரட்டி, சில அபராதங்களை வசூலித்தால் தான் நிலைமை சீராகும் நிலை உருவானது.
இப்போது கோடைகாலம். பள்ளிகள் விடுமுறை காரணமாக குடும்பம் குடும்பமாக ஷாப்பிங் செய்ய மக்கள் இங்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் தி நகர் ரங்கநாதன் சாலையில் தொடங்கி அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முக்கியமாக ரயில் நிலையம் அருகே தான் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது என்று சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளன. காரணம் அங்குள்ள நடேசன் சாலை,ரயில்வே பார்டர் சாலைகளின் இருபக்கத்திலும் சிறு சிறு வியாபாரிகள் நடத்தும் பழக்கடை, மலிவான துணிகளை விற்கும் கடைகள் இருப்பது தான் அந்த பொருட்களை வாங்க கூட்டம் கூடுகிறது. இதனால் உருவாகும் நெரிசலால் அந்த இடத்தில் போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போகிறது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டுதான் நேற்று மாநகராட்சி சார்பாக வந்த ஊழியர்கள் அங்குள்ள சுமார் 56 தற்காலிக கடைகளை அகற்றினர்.