கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளதால் தமிழக எல்லை பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.
முதல் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் 'நிபா' என்ற வைரஸால் அம்மாநில மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் பரவலை மையமாக வைத்து மலையாளத்தில் 'வைரஸ்' என்ற திரைப்படம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து 5 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கேரளாவில் உருவாகியுள்ள இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவாத வகையில் தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி கேரளா தமிழக எல்லையில் தமிழக சுகாதாரத் துறையினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில், தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்விடங்களில் கேரளாவில் இருந்து வரும் எல்லா வாகனங்களையும் நிறுத்தி சுகாதாரத் துறையினர் சோதனை செய்கின்றனர். மேலும் பொது மக்களுக்கு காய்ச்சல், இருமல், நோய்த்தொற்று ஏதாவது இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்கின்றனர்.
இதுகுறித்து பேசிய திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், "இதுவரை தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை. இதன் தாக்கம் இல்லை என்றாலும் தமிழக-கேரள எல்லைகளில் தீவிரமாக நாங்கள் கண்காணிப்பு நடத்தி வருகிறோம். இந்த வைரஸின் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது" என கூறினர்.