திருவாரூர் காட்டூர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் நாளை திறந்து வைக்கப்பட இருக்கிறது. கலைஞர் குடும்பத்து அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.
திருவாரூரில் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் உருவாக்கப் பட்டள்ளது. இதில் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கான அரங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
வள்ளுவர் கோட்டத்தை போலவே, திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆழித்தேர் போன்ற வடிவில் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நூலகம் தவிர இரண்டு திருமண அரங்குகளும், விவாத அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூரில் ஒரு அறிவாலயமாக உருவாகியுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். இதையொட்டி கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டு அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. பின்னர் கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கலைஞர் குறித்து கவிதை வாசிக்கிறார்கள். மாலையில் இசைக்கச்சேரியும் அதைத் தொடர்ந்து கலைஞர் கோட்ட திறப்பு விழாவும் நடைபெற இருக்கிறது.
கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்மார் திறந்து வைக்கிறார். கலைஞரின் சிலையை முதல்வர் ஸ்டாலினும், புதிதாக கட்டடப்பட்டுள்ள நினைவு நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர்கள் தாக்கப்படுவதாக உருவான சர்ச்சைக்கு பின்னர் பீகார் மாநில தலைவர்களுடன் தி.மு.க தலைவர்கள் நெருக்கம் காட்டி வருகிறார்கள்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக ஒரு கூட்டணியை கட்டமைக்க வட இந்திய தலைவர்களை நிதிஷ் குமாரும், தென்னிந்திய தலைவர்களை ஸ்டாலினும் ஒருங்கிணைப்பார்கள் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், கலைஞர் கோட்ட திறப்பு விழா முக்கியத்துவம் பெறுகிறது.