செய்திகள்

சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்தும் வாசிப்பு... சேலம் மக்களின் புத்தக தானம்.

சேலம் சுபா

ரு நல்ல புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். நாம் சொல்ல நினைக்கும் அத்தனையையும் ஒரு படைப்பாளியின் பேனா சொல்லி விடும். புத்தகம் படித்து கெட்டுப்போனதாய் எங்கும் இதுவரை சொன்னதில்லை. வாசிப்பினால் குற்றம் நிகழ்ந்ததுமில்லை. நல்ல படைப்புகளை வாசித்ததன் மூலம் நல்வழியில் மனந்திருந்தியவர்களாக வாழ்வோரும் உண்டு. 

      தவறுகளை செய்து விட்டு சிறைக்குள் அடைபட்டுக்கிடக்கும் கைதிகளுக்கு புத்தகங்கள் வாசிப்பு என்பது ஒரு மதிப்பு மிகுந்த பொழுதுபோக்கு மட்டுமல்ல அவர்களின் வாழ்வின் அடுத்த கட்டத்தை சீரமைக்கவும் உதவும் எளிய வழி என்றே சொல்லலாம். அப்படி பொதுமக்களால் கைதிகளுக்கு தானமாக தரப்பட்ட புத்தகங்கள் பற்றிய செய்திதான் இது.   

      சேலம் மத்திய சிறை கைதிகளுக்கு பொது மக்கள் 4860 புத்தகங்களை தானமாக வழங்கியுள்ள தாகவும் அவற்றை கைதிகள் ஆர்வத்துடன் எடுத்து படித்து வருவதாகவும் அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

        தமிழ்நாட்டில் 9 மத்திய சிறை உள்பட 146 சிறைகள் செயல்பட்டு வருகிறது. விசாரணை கைதிகள் தங்கள் அன்றாடக் கடமைகளை முடித்தபின் வெகுநேரம் எந்த வேலையுமின்றி இருப்பார்கள். ஒரு மனிதன் செயலற்று சும்மா இருந்தாலே அவன் மனதில் கள்ள எண்ணங்கள் எளிதில் வரும் வாய்ப்புண்டு. இதில் ஏற்கனேவே குற்றம் புரிந்த மனிதர்கள் என்றால்? அப்படி எழும் இவர்களின் எதிர்மறைஎண்ணத்தை நல்வழிப்படுத்தும் வகையில் சிறையில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

     அனைத்து சிறைகளிலும் நூலகம் இருந்தாலும் மத்திய சிறைகளில் தான் பெரிய அளவிலான நூலகம் செயல் பட்டு வருகிறது.  இதை அடுத்து சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் சிறை கைதிகளுக்கு புத்தகம் தானமாக தாருங்கள் என்ற கோரிக்கையுடன் ஸ்டால் அமைக்கப்பட்டது. அப்போது ஏராளமானோர் ஒரு புத்தகதானம் வழங்கினர். அதேபோல அனைத்து மத்திய சிறைகளிலும் புத்தகதானம் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையிலும் சுமார் ஒரு மாத காலத்திற்கு பொது மக்களிடம் இருந்து புத்தகம் தானம் பெறப்பட்டது.  பொதுமக்கள். பள்ளி கல்லூரி நிர்வாகிகள், சமூக அக்கறை கொண்டவர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் புத்தகதானம் வழங்கினார்கள். இவ்வாறு 4860 புத்தகங்கள் வந்து சேர்ந்தன. 

    இதில் 4,478 புத்தகங்கள் தமிழ் புத்தகங் களாகும். 382  ஆங்கில புத்தகம் ஆகும் இலக்கியம் நாவல் என தனித்தனியாக பிரிக்கும் பணியில் சிறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிறை அதிகாரிகள் கூறியது. 

     “சேலம் மத்திய சிறையில் பெரிய அளவிலான நூலகம் இருக்கிறது. இதில் உள்ள நூல்களை கைதிகள் எடுத்து படித்து வருகின்றனர். இந்த பழக்கத்தால் கைதிகளின் மனநிலை கண்டிப்பாக மாறும். இல்லையெனில், குடும்பத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது அவர்களின் எண்ணத்தை புத்தகம் பக்கம் திருப்பி வருகிறோம். அவ்வாறு திசை மாற்றுவதன் மூலம் எண்ணங்கள் அருமையாகிறது. நல்ல பழக்கவழக்கம் ஏற்படுகிறது. புத்தக வாசிப்பு அவர்களை நல்வழிப் படுத்துகிறது. தேவைப்படும் புத்தகத்தை கேட்டு வாங்கிச் செல்லும் கைதிகள் பகல் நேரம் மட்டுமின்றி  இரவு நேரத்திலும் படித்து வருகின்றனர்’’ என்று மகிழ்ந்தனர். 

      கண நேரத்தில் தவறுகளை செய்துவிட்டு பின் அதனால் வருந்தி மனம் திருந்தி வாழ நினைக்கும் சிறைவாசி களுக்கு பெரும் பயனைத் தருகிறது இந்த புத்தகங்கள் எனலாம்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT