Writer Indira Soundararajan 
செய்திகள்

பிரபல எழுத்தாளரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தரராஜன் காலமானார்!

கல்கி டெஸ்க்

பிரபல எழுத்தாளரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தரராஜன் இன்று காலமானார். மதுரை, டிவிஎஸ் காலனியில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த அவர், சில காலமாகவே புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று காலை குளியலறைக்குச் சென்றபோது தரை வழுக்கி விழுந்து, தலையில் பலத்த காயத்தோடு அவரது குடும்பத்தினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 66. இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உண்டு.

1958ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி சேலத்தில் பிறந்த இந்திரா சௌந்தரராஜன், சுமார் 340 நாவல்கள் மற்றும் 700 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அதுமட்டுமின்றி, பல்வேறு தொலைக்கட்சி தொடர்களுக்கு இவர் கதை வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘என் பெயர் ரங்கநாயகி’ எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் 3வது பரிசு பெற்றது. ‘சிருங்காரம்’ என்ற படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருதை இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவரது நாவல்கள் மற்றும் சிறுகதைகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், மறுபிறப்பு, பேய்கள், கடவுள்கள் போன்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவையாக விளங்கின. அதுமட்டுமின்றி, அவை பெரும்பாலும் தமிழ்நாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் அமைந்தவைகளாக இருந்தன. மறைந்த இந்திரா சௌந்தரராஜன் எழுத்தாளராக மட்டுமின்றி, பிரபல ஆன்மிக சொற்பொழிவாளருமாக விளங்கினார். இவர் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் வாயிலாக தமது ஆன்மிக உரைகளை நிகழ்த்தி வந்தார்.

நமது ‘கல்கி’ குழும நிறுவனத்தோடு நீண்ட கால தொடர்பில் இருந்த இவர், நமது குழும இதழ்களிலும் பல்வேறு வகையான படைப்புகளைத் தந்து சிறப்பித்து இருக்கிறார். காஞ்சி மகா பெரியவரிடம் மாறாத பக்தி கொண்டிருந்த இவர், கடந்த 2013ம் ஆண்டில் நமது கல்கி குழுமத்தின் ‘தீபம்’ ஆன்மிக இதழில் ‘சந்திரசேகரம்’ எனும் நீண்ட ஆன்மிகத் தொடர் ஒன்றை எழுதினார். பல லட்சம் வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இந்தத் தொடர் ‘தீபம்’ இதழில் ஒரு வருடத்தைக் கடந்தும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர் இந்திரா சௌந்தரராஜன். மறைந்த இந்திரா சௌந்தரராஜனின் உடல் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது ஆன்மா என்றும் இறைவன் திருநிழலில் இளைப்பாற கல்கி குழுமம் தமது இதயப்பூர்வ அஞ்சலியை செலுத்துகிறது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT