ஒரு நகரம் வளமையாக இருக்க வேண்டுமெனில் அதற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது அங்குள்ள நீர்நிலைகளும் ஏரிகளும் தான். அந்த நீர்நிலைகளைப் பேணும் பொறுப்பில் உள்ள அரசு அவ்வப்போது அதற்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. சேலத்தில் உள்ள ஏரிகளை மறு சீரமைக்க திட்ட அறிக்கை வெளிட்டுள்ள செய்தி இதோ.
சேலத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தும் வகையில் புகழ்பெற்ற மூக்கனேரி உள்பட மூன்று ஏரிகளை மறுசீரமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரத்தின் நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் ஏரிகளை சீரமைப்பதற்கும் நீராதாரத்தை பெருக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சேலம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 1913-ம் ஆண்டு பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நீரின்றி காணப்படும் இந்த ஏரியை சீரமைத்து சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஏரி மறுசீரமைப்பு பணிக்கு ரூபாய் 498 கோடி நிதி ஒடுக்கீடு செய்யப்பட்டது. ஏரியில் புதர் மண்டி காணப்படும் கருவேலமரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு வருவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மேட்டூரில் இருந்து தனி குழாய் அமைத்து பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் சேலத்தில் மூக்கனேரி, போடிநாயக்கன் பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி ஆகிய மூன்று ஏரிகளையும் மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். தொடர்ந்து அதற்கான பணிகள் துவங்கப்பட்டு மூக்கனேரி அல்லிக்குட்டை ஏரிகளை மேம்படுத்த பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் திட்ட அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போடிநாயக்கன்பட்டி ஏரியை சீரமைக்க சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.
அதன்படி ஏரியின் கரையை வலுப்படுத்தல் பூங்கா அமைத்தல், பறவைகள் வந்து செல்ல மண் திட்டு அமைத்தல், கழிவுநீர் செல்ல தனி பாதை அமைத்தல். நீர் வழிதத்தடம் அமைத்தல், சிறுவர்கள் விளையாட்டு உபகரணம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் “சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குமரகிரி ஏரி, பள்ளபட்டி ஏரிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சேலம் மூக்கனேரி , போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரிகளும் சீரமைத்து மேம்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.. அவரது அறிவிப்பின் அடிப்படையில் மேற்கொள்ள ஏதுவாக மூன்று ஏரிகளின் மேம்பாட்டு பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 52 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையடுத்து பணிகள் விரைவில் தொடங்கும். மூன்று ஏரிகளிலும் கரைகள் மேம்படுத்துதல், ஆழப்படுத்துதல், பூங்கா மின் விளக்குகள் அமைக்கப்படும். மூன்று எரிகளும் புதுப்பொலிவு பெறும்” என்றனர்.
ஏரிகள் எப்போது புதுப்பொலிவுடன் காட்சி தரும் சென்று மகிழலாம் என்று காத்திருக்கும் சேலம் மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பாக்கப் படுகிறது.