இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியால் இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உலக நாடுகள் தத்தமது நிலைப்பாட்டை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றன. போரில் பாதிக்கப்படும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் சில நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பிரமாண்ட பேரணிகள் நடைபெற்றன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வலதுசாரிகள் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.
இது குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அமைச்சரான சுயல்லா பிரேவர்மேன் கட்டுரை ஒன்றை வெளியிட்ட அவர், பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு சார்பாக இங்கிலாந்து காவல்துறை செயல்படுவதாக விமர்சித்தார். வன்முறையில் ஈடுபடும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இஸ்ரேலுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுக்க அனுமதிப்பதில்லை என்றும் சாடினார். சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்கும் அமைச்சரே இக்குற்றச்சாட்டை முன்வைத்தது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
உள்துறை அமைச்சரின் குற்றச்சாட்டை கையில் எடுத்த எதிர்க்கட்சியினர், ரிஷி சுனக் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். சுயல்லா பிரேவர்மேனை பதவியில் இருந்து நீக்க கோரி, அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினரே குரல் கொடுத்தனர். இருப்பினும் ஆரம்பத்தில் இதனை பெரிதாக கண்டு கொள்ளாத ரிஷி சுனக், அழுத்தம் அதிகரித்ததால், சுயல்லாவை பதவி நீக்கம் செய்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயல்லா பிரேவர்மேன் சர்ச்சையில் சிக்குவதோ, பதவி நீக்கம் செய்யப்படுவதோ புதிதல்ல. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த போது, லிஸ் டிரஸ் குறுகிய காலம் பிரதமராக இருந்தார். அவரது அமைச்சரவையில், சுயல்லாவிற்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது, தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து அதிகாரப்பூர்வ ஆவணங்களை சுயல்லா அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், சுயல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆறு வாரங்களுக்குள் இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தலைமையில் புதிய அரசு அமைந்தது. யாரும் எதிர்பாராதவகையில், சுயல்லாவிற்கு ரிஷி சுனக் உள்துறை அமைச்சர் பதவியை மீண்டும் வழங்கினார். அப்போதே, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சிலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இது ஒரு புறம் இருக்க, உள்துறை அமைச்சராக பதவி வகித்த சுயல்லா பிரேவர்மேன், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வந்தார். குறிப்பாக, இங்கிலாந்து சாலைகளில் வசிக்கும் அகதிகள், அவர்களின் வாழ்க்கை முறையை, அவர்களாகவே தேர்வு செய்து கொண்டுள்ளனர் என்று விமர்சித்தார். இதன் உச்சமாக சிகிச்சைக்கு இங்கிலாந்து வரும் ஓரின சேர்க்கையாளர்களே, அகதி அந்தஸ்து கோருவதாகவும் சாடினார். மேலும், பாகிஸ்தான் ஆண்கள் அனைவரும், போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், பாலியல் வன்கொடுமை செய்து பிரிட்டன் பெண்களை ஏமாற்றுவதாகவும் கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்த நிலையில், தற்போது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து காவல்துறை செயல்படுவதாக கூறியது, அந்நாட்டு அமைச்சரவை மாற்றும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜேம்ஸ் கிளவர்லி உள்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இங்கிலாந்து அமைச்சரவையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், ஆட்சி அனுபவம் மிக்க டேவிட் கேமரூன், வெளியுறவு விவகாரத்தில் மேற்கொள்ள உள்ள முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.