கர்நாடக அரசியலில் தற்போது இரண்டு உயர் அதிகாரிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக பரஸ்பர மோதல் நடந்து வந்தது . இது தற்போது இருவரின் பணி இட மாறுதலுக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் இடையேயான பகை கர்நாடக அதிகார வர்க்கத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் அரசியல் தலைமையையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது சிலதனிப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவரது பணி தொடர்பான சில குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார்.ரூபா மௌத்கில் தற்போது கர்நாடக கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ரோகிணி சிந்துரி உள்ளார்.
கர்நாடகாவில் இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி, பல ஊழல்களில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மௌத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ரூபா மீது ரோகிணி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உயர் அதிகாரிகள் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததையடுத்து, இருவரையும் கர்நாடக அரசு காத்திருப்பு பட்டியலில் வைத்தது.
ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா மௌத்கில் கடந்த காலங்களிலும் இது போன்ற சில ரகசியங்களை வெளியிட்டார், இதனால் அவரது மேலதிகாரியான காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சிறைகள்) பதவியிலிருந்து ராஜிநாமா செய்யநேர்ந்தது.
தற்போது, ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2015ல், மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஜில்லா பஞ்சாயத்து சிஇஓவாகஇருந்தபோது, ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கழிப்பறைகளை உருவாக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிந்துரிக்கு விருது வழங்கியுள்ளார். ஒரு லட்சம் கழிப்பறைகள் என்ற புள்ளி விவரத்தை ரோகிணி சிந்துரி தவறாகக்கூறியதாக ஐபிஎஸ் ரூபா மௌத்கில் கூறுகிறார். சர்ச்சையைத் தொடர்ந்து இருவரும் பொறுப்புகள் இல்லாத பணி இடங்களுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்புவதாக ரூபாவிற்கு ரோகிணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர இருப்பதாக ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனக்கு எதிராக அவதூறாக பேச தடை விதிக்க வேண்டுமென பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூபாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் ரோகிணி.