தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை கொட்டிதீர்த்து வருகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16 ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தீபாவளியன்று மழை இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், மறுநாளான இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி மாலை முதலே ஆங்காங்கே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 14) விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து கன மழை காரணமாக நாளை (14/11/23,)புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.- கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். மேலும் மிக கனமழை மற்றும் கனமழை உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் ஆட்சியர்கள் விடுப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.