கொலீஜியம் முறையை ரத்துச் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உறுதி தெரிவித்துள்ளது. விரைவில் இதற்கான தேதியை அறிவிப்பதாகவும் கூறியுள்ளது.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் எனப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு தேர்வு செய்கிறது. இதற்கு மாற்றாக மத்திய அரசு தரப்பில் நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை நிராகரித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், கொலீஜியம் முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கோரி வழக்குரைஞர் மாத்யூ நெடும்பாரா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீண்டகாலமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் இருப்பது குறித்து மாத்யூ நெடும்பாரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடிடம் முறையிட்டார்.
இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாலும், அரசியல் சாசன அமர்வின் உறுப்பினராகன நீதிபதி எஸ்.கே.கெளல் உடல்நலம் இல்லாமல் இருப்பதாலும், அரசியல் சாசன அமர்வு தற்போது ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் கோரும் வழக்கை விசாரித்து வருவதாலும் தாமதமாவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய நெடும்பாரா, கோடைக்கால விடுமுறைக்கு முன்னரோ அல்லது அதன் பிறகோ வழக்கு விசாரணையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், விசாரணை தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், விரைவில் விசாரணை தேதியை அறிவிப்பதாக உறுதி தெரிவித்தார்.