ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மதத்தின் பெயரால் இவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பெண்களின் பல்வேறு அடிப்படை உரிமைகளை பறித்து வருவதோடு, பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர். அதன்படி, ஆப்கான் நாட்டுப் பெண்கள் பள்ளி, கல்லூரி போன்ற அடிப்படைப் பொது இடங்களில், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றனர். மேலும், என்ஜிஓக்களில் பணி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நாட்டின் பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
தலிபான்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அதை எதையும் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அதற்கு மாறாக, தொடர்ந்து புதிது புதிதாக கட்டுப்பாடுகளை பெண்கள் மீது விதித்து வருகின்றனர். இதனால் பெண்கள் பலரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது புதிதாக, ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பெண்களுக்கான அழகு நிலையங்கள் குறித்து ஒரு அதிரடி உத்தரவை தலிபான் அரசு பிறப்பித்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் மற்ற மாகாணங்களில் இருக்கும் பெண்கள் அழகு நிலையங்கள் அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பெண்களின் அழகு நிலையங்களுக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக காபூல் நகராட்சிக்கான நல்லொழுக்க அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அகீப் மகாஜர் கூறுகையில், ‛தலிபான் அரசின் இந்தப் புதிய உத்தரவை அனைவரும் நடைமுறைப்படுத்துவதோடு, கடைபிடிக்கவும் வேண்டும்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.