என்னதான் சைபர் கிரைம் கும்பல்களிடமிருந்து மக்கள் பலவகையில் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், சிலர் அலர்ட் ஆவதற்குள் ஏமாந்து விடுகிறார்கள். அப்படி டெல்லியில் 5 நிமிடம் மட்டுமே பேசி ஒருவரிடமிருந்து 40,000 அபகரிக்கப்பட்டுள்ளது.
போலியான செல்போன் எண்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் சைபர் க்ரைம் கும்பல்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர். செல்போன் அழைப்பு அல்லது மெசேஜ் மூலமாக உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது, பார்ட் டைம் வேலை உள்ளது, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுங்கள் என பல பொய்களைக் கூறி, மக்களின் தகவல்களைத் திருடி பணத்தை அபகரிப்பது சைபர் குற்றவாளிகளின் வேலையாகும். இப்படி மக்களின் ஆசையை எளிதாகத் தூண்டிவிட்டு, அவர்களை நம்ப வைத்து ஏமாற்றும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.
டெல்லியில் ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்டாக வேலை செய்பவர் ரமேஷ் குமார். இவருக்கு சமீபத்தில் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபரும் நீண்ட காலம் பழக்கிய நண்பரைப் போல நன்றாக பேசியுள்ளார். ரமேஷ் குமாரும் யாரோ பழைய நண்பர் என நினைத்துப் பேசியுள்ளார். எதிரே பேசிய நபரின் குரலும், ரமேஷ் குமாருக்கு தெரிந்த டாக்டரின் குரலும் ஒரே மாதிரி இருந்ததால், நீங்கள் டாக்டர் தானே என்று கேட்டதற்கு அந்த நபரும் ஆம் என பதிலளித்துள்ளார்.
பின்னர் அந்த நபர் நான் உனக்கு பணம் அனுப்புகிறேன். அதை பத்திரமாக வைத்துக்கொள். மாலையில் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்து நிலையில், அதை ரமேஷ் குமாரும் ஒப்புக்கொள்ள, முதலில் சரிபார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில் அவருக்கு 2 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். அப்போது ரமேஷ் குமாருக்கு வந்த லிங்கை தொட்ட உடனேயே, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் டெபிட் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து அந்த நபருக்கு மீண்டும் அழைப்பு விடுத்தபோது, இது தவறுதலாக நடந்து விட்டது மீண்டும் அனுப்பி விடுகிறேன் என மற்றொரு லிங்க்-ஐ ரமேஷ் குமாருக்கு அனுப்பியுள்ளார். அதை மீண்டும் ரமேஷ் குமார் தொட்டவுடன், மேலும் 20 ஆயிரம் ரூபாய் அவர் வங்கிக் கணக்கிலிருந்து மாயமானது.
இதைத்தொடர்ந்து அந்த நபருக்கு மீண்டும் கால் செய்த போது அவர் போன் சுவிட்ச் ஆப் என அறிவிப்பு வந்த நிலையில்தான், தாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது ரமேஷ் குமாருக்குத் தெரியவந்துள்ளது. நடந்த சம்பவம் அனைத்தும் வெறும் 5 நிமிடங்களுக்குள் அரங்கேறி இருக்கிறது. இதையடுத்து எதிரே பேசிய நபர் ஹிப்னாடிசம் செய்து தன்னை பேசியே மயக்கி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார் ரமேஷ் குமார். ரமேஷ் குமாருக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கோ மெசேஜ்களுக்கோ பதிலளிக்க வேண்டாம் எனவும், அப்படியே பேசினாலும் உங்கள் வங்கி விவரங்கள் ஏதும் பகிரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுரை வழங்கி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.