சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள்ள ஒதுக்கீடுக்கு இன்று நேரடி கலந்தாய்வு தொடங்கியது.
2023-2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த 25ஆம் தேதி தொடங்கி வரும் 31 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக மருத்துவப் படிப்புகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சுகாதாரத் துறையின் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் ஆன்லைனில் நேற்று முன்தினம் தொடங்கியது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர்.
குறிப்பாக, நீட் தேர்வில் வெற்றி பெற்றோரிடமிருந்து ஜுன் 23 ஆம் தேதி முதல் ஜுலை 12 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் மொத்தமாக 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3,042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 420 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு இன்று சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6326, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் 1768, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.