நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு செல்லும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
டி. இ.ஏ.எல்.சி (டெக்னிக்கல் எஜுகேஷன் அண்ட் லேர்னிங் சப்போர்ட்) என்ற இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கும் தற்போதைய அதிநவீன தொழில்நுட்பமான ஆன்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபோடெக் டெக்னாலஜி, மெஷின் லேர்னிங் போன்றவை கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் முயற்சி எடுத்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் இருந்தவாறு தனது முகநூல் பக்கத்தின் வாயிலாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பது, இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 13 கிராமப்புற பள்ளிகளில் உள்ள 3800 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
இதை பாராட்டி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது, தம்பி மகேஷ் பொய்யாமொழி அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அதற்கான பணிகளில் ஈடுபடும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள். கல்வியிற்சிறந்த தமிழரெனப் பார் போற்ற பாடுபடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.