சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்த பஸ்தார் பள்ளத்தாக்கு மாவோயிஸ்டுகளின் பாதுகாப்பான புகலிடமாக பல ஆண்டுகளாக விளங்கி வருகிறது. இது தவிர, சத்தீஸ்கர், ஆந்திரா, ஒடிஷா ஆகிய மூன்று மாநில எல்லைகளை இணைக்கும் மலைத் தொடர் பகுதிகள் பெரும்பாலானவற்றிலும் மாவோயிஸ்டுகள் கைகளே ஓங்கி இருக்கின்றன. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி அறிவிப்புகள் எதுவும் மேற்சொன்ன இந்த மூன்று மாநில மலைப்பகுதிகளுக்கும் சென்றுவிட முடியாதபடி மாவோயிஸ்டுகள் இப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் எண்ணிக்கை மிகப்பெருமளவில் குறைந்திருந்தது. இதற்குக் காரணம், மாவோயிஸ்டுகளுக்கு பக்கபலமாக இருந்த பழங்குடி இன மக்கள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற விரும்புவதே முக்கியமான காரணம் ஆகும். அதேசமயத்தில் சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திராவின் தன்டகாருண்யா, தண்டேவடா போன்ற வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளைத் தேடுதல் நடவடிக்கைகளுக்காக பெரிய அளவு துணை ராணுவமும், போலீசாரும் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 400 மாவோயிஸ்டுகள் அரசிடம் சரணடைந்து, நலத்திட்ட உதவிகளைப் பெற்று வாழ்வதாக அந்த மாநில போலீசார் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்தனர். இந்தப் பேட்டி சமூக ஆர்வலர்களிடம் பெரும் விவாதப் பொருளாகி இருந்தது.
இந்த நிலையில், இன்று போலீசாரின் இதுபோன்ற பேட்டிகளுக்கு பதிலடி தரும் வகையில் மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பயங்கர தாக்குதல் ஒன்றை நடத்தினர். இந்தத் தாக்குதலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தைக் குறி வைத்து மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 10 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் தவிர, அந்தப் போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.