செய்திகள்

பெற்றோரைக் கைவிட்ட மகனின் சொத்துக்கள் பறிமுதல்! சப் கலெக்டரின் அதிரடி நடவடிக்கை!

கார்த்திகா வாசுதேவன்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை. இவரது வயது 74. மனைவி தங்கம், வயது 63. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இறந்து விட்ட நிலையில் இளைய மகன் அனீஸ் என்பவரோடு வாழ்ந்து வந்தனர்.

35 வயது அனீஸ் முதல் திருமணம் விவாகரத்தில் முடியவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதிபா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அனீஸின் தாயார் தங்கம் புற்று நோய் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அனீஸும் அவரது இரண்டாவது மனைவியும் நாட்கள் செல்லச் செல்ல வயதான பெற்றோரை சரியாகப் பராமரிக்காமல் அவர்களைப் புறக்கணிக்கத் தொடங்கினர். அதன் இறுதி கட்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெற்றோரை வீட்டை விட்டும் துரத்தி விட்டனர். மகன் கை விட்ட நிலையில் உறவினர் பராமரிப்பில் இருந்த தங்கம் மனம் நொந்து போனார்.

பாதிக்கப்பட்ட பெற்றோரில் தாயார் தங்கம் இது குறித்து தக்கலை கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு தீர்ப்பாயத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகார் மனுவில், தங்களால் வழங்கப்பட்ட சொத்துக்களைப் பெற்றுக் கொண்டு தங்களை நடுத்தெருவில் நிறுத்திய மகனையும், மருமகளையும் விசாரித்து தங்களது சொத்துக்களை மீண்டும் தமக்கே பெற்றுத் தருமாறு தங்கம் கோரிக்கை விடுத்திருந்தார்.

புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட முதன்மை நீதிமன்ற நடுவரும் தக்கலை சப் கலெக்டருமான கெளசிக் இரு தரப்பினரையும் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியதில் தங்கம் அளித்த புகார் உண்மை என்று தெரிய வந்தது.

தீவிர விசாரணையின் பின் பெற்றோரின் சொத்துக்களை மட்டும் அனுபவித்துக் கொண்டு அவர்களைப் பராமரிப்பின்றி தெருவில் விட்ட அனீஸ் மற்றும் அவரது மனைவி பிரதிபா இருவரும் கண்டிக்கப் பட்டதோடு அனீஸ் பெயருக்கு அவரது தாயார் தங்கம்மாள் எழுதிக் கொடுத்திருந்த சொத்துக்களின் ஆவணப் பத்திரங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சப் கலெக்டரின் உத்தரவு நகல், தக்கலை சார் பதிவாளருக்கு அனுப்பப் பட்டு உடனடியாக அனீஸ் பெயரில் இருந்த சொத்து ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.

பெற்றோர் மூலமாக கிடைக்கும் சொத்துக்கள் வேண்டும் ஆனால், அவர்கள் சுமையாகக் கருதப்படுவார்கள் என்று கருதும் பிள்ளைகளுக்கு தக்கலை சப் கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை நல்ல பாடமாக அமைந்தது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT