ChatGPT, BardAI செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மற்றும் அதேபோன்ற தொழில்நுட்பங்களால் வேலைப்பாதுகாப்பு நிச்சயமில்லாமல் போகும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது. இது உலகெங்கிலுமுள்ள மக்களிடையே பரவாலான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏனென்றால் அவர்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் தொழில்களை AI தொழில்நுட்பம் எடுத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இதைப்பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள்.
சமீபத்தில் காப்பிரைட்டராக பணிபுரிந்த பெண் ஒருவர், ChatGPT-ஆல் தன் பணியை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் அந்தத் துறையிலேயே இன்னொரு வேலையை தேடுவதற்கு பதிலாக, கார்ப்பரேட் உலகத்திலிருந்து விலகி, நாயை வாக்கிங் கொண்டு செல்லும் பணியில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் 25 வயது பெண் 'ஒலிவியா லிப்கின்'. ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் காப்பிரைட்டராக இருந்தார். 2022-ல் சாட் ஜிபிடி அறிமுகமானபோது இதெல்லாம் நம்மை என்ன செய்யப்போகிறது என கவன குறைவாக இருந்த அவர், காலப்போக்கில் தனது அலுவலகத்தில் ChatGPT பயன்படுத்தி உள்ளடக்கங்கள் எழுதுவதை கவனித்தார்.
இறுதியில், கடந்த ஏப்ரல் மாதத்தில் எதிர்பாராத விதமாக எந்த விளக்கமும் இன்றி, அவர் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டார். ஒரு எழுத்தாளரை பணியமர்த்துவதற்கு பதிலாக ChatGPT-யைப் பயன்படுத்துவதால் ஏற்படும் செலவு-சேமிப்புப் பலன்களைப் பற்றி தனது மேலாளர்கள் விவாதிப்பதை கவனித்தபோது, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரிந்தது.
"மக்கள் இதைப் பற்றி விவரிக்கும் போதெல்லாம், இது எனது வேலையை பாதுகாப்பற்றதாக மாற்றும் என உணர்ந்தேன். தற்போது இது உண்மையாக மாறிவிட்டது. ஏற்கனவே இதுபோன்று நடக்கும் என நான் எதிர்பார்த்திருந்தேன். இப்போது AI காரணமாக வேலையில்லாமல் இருக்கிறேன். நிறுவனங்கள் மிகவும் மலிவான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த விருப்பமானது தற்போது மனிதனாக இல்லாமல் ரோபோவாக இருக்கிறது. இதனால், மிகவும் செலவு குறைந்தத் தீர்வைத் தேடும் நடைமுறையில் நிறுவனங்கள் மாறிவிட்டது" என்று லிப்கின் தெரிவித்துள்ளார்.
பணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்ளடக்க சந்தைப்படுத்துதல் துறையில் மீண்டும் நுழைய நினைத்தபோதும், அவருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே மன அழுத்தத்திற்கு உள்ளனர். இந்த இக்கட்டான நிலையைத் தவிர்ப்பதற்காக கார்ப்பரேட் சூழலிலிருந்து விலகியிருக்க வேண்டி, தற்போது நாய்களை வாக்கிங் கூட்டிப்போகும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலமாக, கார்ப்பரேட் உலகிலிருந்து முற்றிலும் விலகுவதற்கான தனது முடிவைத் தெரிவித்துள்ளார் லிப்கின்.
இதனால், மக்கள் மத்தியில் தங்களுடைய வேலையும் AI தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் மாற்றப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.