செய்திகள்

அதானி விவகாரத்தில் செபியின் செயல்பாட்டில் குறையொன்றுமில்லை - உச்சநீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை!

ஜெ. ராம்கி

அதானி நிறுவனங்களின் மீது செபி அமைப்பு நடந்து கொண்ட விதத்தில் குறையொன்றும் தெரியவில்லை என்று நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. 178 பக்க அறிக்கையின் முடிவில் செபி கடமை தவறியதா என்பதை கணிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.

பங்குச்சந்தையில் அதானி குழுமம் மோசடி செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. அது குறித்து செபி அமைப்பு விசாரித்து வருகிறது. விசாரணையை செய்து முடிக்க ஆறு மாத காலஅவகாசம் வேண்டும் என்று செபி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. சென்ற வாரம் இது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் மூன்று மாதங்கள் மட்டுமே அவகாசம் தந்திருக்கிறது.

அதானி விஷத்தில் செபியின் செயல்பாடு பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் ஒரு குழுவை நியமித்திருந்தது. 6 நிபுணர்களை கொண்ட குழு, செபியின் செயல்பாடுகள் குறிப்பாக அதானி நிறுவனத்திற்கு சாதகமாக ஏதேனும் நடந்து கொண்டதா என்பது குறித்து விசாரித்து வந்தது.

இந்நிலையில் சாப்ரே தலைமையிலான குழு செபி அமைப்பின் செயல்பாடு குறித்து 178 பக்க அறிக்கையை நேற்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான ஜனவரி 24-ந் தேதிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் தேவையற்ற ஏற்ற இறக்கம் எதுவும் கண்டறியப்படவில்லை. அதானி குழும பங்குகளின் ஏற்ற இறக்கம் மட்டுமே அதிகமாக இருந்தது.

13 வெளிநாட்டு முதலீ்ட்டு நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பதை கண்டறியமுடியவில்லை. அவற்றின் பங்குதாரர்கள், உண்மையான பங்குதாரர்கள் அல்ல என்றும், அவர்கள் அதானி குழும உரிமையாளர்களின் போலி ஆட்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவறை தந்த தகவல்களின் அடிப்படையில் விசாரித்தும் போலி ஆட்கள் பற்றி கண்டறிய முடியவில்லை.

இதனால் விசாரணையில் முன்னேற்றமில்லை. செபி அளித்த ஆதாரங்கள், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பங்கு விலையை செயற்கையாக மாற்றி அமைக்கப்பட்டது சொல்லப்படும் விஷயத்தில் செபி அமைப்பு கடமை தவறிவிட்டதாக எங்களால் முடிவுக்கு வரமுடியவில்லை. அதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. அகவே, செபி அமைப்பின் செயல்பாட்டில் குறைபாட்டை பார்க்க முடியவில்லை என்று சாப்ரே குழு முடிவுரை எழுதியிருக்கிறது.

நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். பரந்து பட்ட அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே, நிபுணர் குழுவால் முறைகேட்டை கண்டுபிடிக்க முடியாது என்று ஏற்கனவே கூறி வந்திருக்கிறோம். வெளிநாட்டு முதலீட்டு பிரிவில் கணக்கில் காட்டப்படாத 20 ஆயிரம் கோடி யாருடைய பணம் என்பதை கண்டுபிடித்தாக வேண்டும். ஆகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியம் என்கிறார், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ்.

ஆக, கன்னித்தீவு கதைதான்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT