உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியைக் குறிப்பிடுவதற்கு பதிலாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் பெயரைச் சொல்லி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார், ஜோ பைடன்.
லித்துவேனியா நாட்டின் தலைநகர் விலினியசில் நேட்டோ அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு நேற்று முடிவடைந்தது. அதன் பின்னர் பன்னாட்டு ஊடகத்தினரைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியைப் பற்றியும் குறிப்பிட்டார். அப்போது பேசிய அவர், ரஷ்ய அதிபர் புட்டினின் முதல் பெயரான விளாதிமிர் எனக் குறிப்பிட்டார். பிறகு ஒருவாறு சமாளித்து தவறைத் திருத்திக்கொண்டு, சரியானபடி பெயரைக் குறிப்பிட்டார்.
“ செலன்ஸ்கியும் நானும் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் என்னென்ன உத்தரவாதங்களை அளிக்க முடியுமோ, அவற்றைப் பற்றியெல்லாம் உக்ரைனிலும் பல இடங்களிலும் சந்தித்துப் பேசியிருக்கிறோம்.” என்றார் பைடன். முன்னதாக பைடன் இப்படி பிசகியபடி பேசுவதும் நடந்துகொள்வதும் இது முதல் முறை அல்ல. ஒரு முறை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, “ (ரஷ்ய அதிபர்) புட்டின் ஈராக் போரில் தோற்கக்கூடிய நிலையில் இருக்கிறார்.” என்று குறிப்பிட்டார். உக்ரைனில்தானே போர் நடக்கிறது; ஈராக்கில் இல்லையே என்றெல்லாம் யோசிக்கவேண்டாம்; பைடன் வாய்தவறிப் பிசகிப் பேசிய வார்த்தைதான் அது.
அப்போது மட்டும் அல்ல, அதற்கு முன்னர் அவர் ஆற்றிய உரை ஒன்றில்கூட, ரஷ்யா தொடுத்துள்ள போர் பற்றிப் பேசுகையில், உக்ரைன் நாட்டவர் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ஈரானியர்கள் என்று தவறிச் சொல்லியிருந்தார். அதாவது, “ ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரைனின் கீவ் நகரத்தை டாங்கிகளால் சுற்றி வளைக்கலாமே தவிர, அவரால் எப்போதும் ஈரானிய மக்களின் இதயத்தையும் ஆன்மாவையும் வென்றுவிட முடியாது.” என்று பைடன் அப்போது குறிப்பிட்டார்.
இதைத் தவிர, அண்மையில் நேட்டோ மாநாட்டுக்குச் சென்றபோது, பிரிட்டனுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார், ஜோ பைடன். அப்போது, விண்ட்சர் அரண்மனையில் அந்நாட்டு அரசர் சார்லஸை பைடன் சந்தித்தபோது, மரபுகளை மீறி நடந்துகொண்டார். சார்லசின் முன்பாக அவர் இலேசாக கலக்கமடைந்த மனநிலையில் இருந்தார். அங்கிருந்த பிரிட்டன் இராணுவத்தினர் ஒருவரிடம் மரபைமீறி பேசிக்கொண்டு இருந்ததுடன், நீண்ட நேரமும் எடுத்துக்கொண்டார்.
சார்லஸ் அதை சுட்டிக்காட்டியும் பைடன் அதைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டு இருந்தார். சில மணித்துளிகளுக்குப் பிறகே மன்னரின் குறிப்புணர்த்தலை பைடன் புரிந்துகொண்டு, சகஜத்துக்கு வந்தார்.