தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பொறுத்து தான் உலக நாடுகளின் வளர்ச்சியே தற்போது கணக்கிடப்படுகிறது. தொலைத் தொடர்பு துறையின் வளர்ச்சி மற்றும் இணையவேகம் அதிகமுள்ள நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வேலை வாய்ப்புகள் போன்றவை அதிகமாக உருவாகி வருகின்றன. இதனால் மக்கள் பல்வேறு விதமான திறன்கள், வெளியுலக அறிவு போன்றவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகிறது. கடந்த 20 ஆண்டுகால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், செல்போன் துறையின் வளர்ச்சி அசுர வளர்ச்சியடைந்திருப்பதைக் கண்கூடாகந் பார்க்க முடியும்.
இந்தியாவில் சமீபத்தில் தான் 5G சேவை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை செல்போன் சிக்கலே கிடைக்காத கிராமமும் தமிழ்நாட்டில் ஒன்று உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா?. அப்படி ஒரு கிராமமும் இருக்கிறது. அதுதான் நீலகிரி மாவட்டத்திலுள்ள பர்லியாறு என்ற கிராமம்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்தியாவின் முன்னணி சுற்றுலா தலமான ஊட்டிக்கு செல்லும் வழியில் இருக்கிறது இந்த மலைக் கிராமமான பர்லியாறு. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த கிராமத்தைக் கடந்தே வாகனங்களில் செல்கிறார்கள். இந்த கிராமத்தைத் தாண்டி செல்லும் வழியில் சாலையை ஒட்டி பிரபலமான சந்தை ஒன்றும் உள்ளது. அங்கே சுற்றுலாப் பயணிகள் இறங்கி காய்கறிகள் பழங்கள் வாங்குவது, தேநீர் அருந்துவது வழக்கமான ஒன்று. அப்போது அங்கே உள்ள கடைகளில் இணையப் பரிவர்த்தனையை பயன்படுத்த முடியாததால், அவர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.
இதைப் பற்றி வியாபாரிகளிடம் விசாரித்தால் இங்கே செல்போன் சிக்னலே கிடையாது என்கிறார்கள். இதனால் அவர்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், பலர் இவ்விடத்தில் வாகனத்தை நிறுத்தி பொருட்களை வாங்கவே தயங்குகிறார்கள் எனவும் தெரிவிக்கிறார்கள். மேலும் அந்த வழியாக செல்லும் பயணிகளின் வாகனங்கள் ஏதாவது பழுதானாலும், சிக்னல் இல்லாததால் உதவி கோர முடியாமல் அவதியடைவதாகக் கூறுகிறார்கள்.
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக இந்த கிராமத்து மாணவ மாணவியர்கள் செல்போன் சிக்னலுக்காக காடுகளுக்குள் சென்று பாடம் பயின்று வந்துள்ளார்கள். யாரிடமாவது போனில் பேச வேண்டும் என்றால் கூட, குன்னூர் அல்லது மேட்டுப்பாளையம் வரை செல்ல வேண்டும் என்கிறார்கள் இந்த கிராமத்து மக்கள்.
இந்த காலத்தில் இப்படி ஒரு கிராமம் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. இதை வேறு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் செல்போன் பயன்படுத்தாமல் இவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.