செய்திகள்

அரசியலாகும் காய்கறி, அரிசி விலைவாசி உயர்வு:மத்திய, மாநில அரசுகளை குறை கூறும் கட்சிகள்!

ஜெ. ராம்கி

தொடர்ந்து ஏறி வரும் தக்காளியில் விலை முதல் அரிசி விலை உயர்வு வரை அனைத்தும் தமிழ்நாட்டின் அரசியல் விவாதங்களில் இடம் பிடித்திருக்கிறது. தக்காளி விலை உயர்வையும் தி.மு.க Vs பா.ஜ.க அரசியல் சண்டையாகவே தொடர்கிறது. தமிழகத்தில் மட்டும் விலை உயர்வு அல்ல, அனைத்து மாநிலங்களிலும் தமிழகத்தை விட அதிகமான விலைவாசி உயர்வு இருப்பதை கவனிக்க தவறுகிறார்கள்.

எதிர்பாராத நேரத்தில் வந்த மழையும், வெள்ளமும் ஒட்டுமொத்த தேசத்தையும் பாதித்திருக்கிறது. நாடு முழுவதும் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதுதான் விலை உயர்வுக்கு காரணம் என்று காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

வட மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு காய்கறி வகைகள் தண்ணீரில் மூழ்கி அழுகிப்போய்விட்டன. வழக்கமான இடங்களிலிருந்து வரும் சப்ளை அனைத்தும் நின்று போய்விட்டது. இதன் காரணமாக கையிருப்பில் உள்ள காய்கறிகளை கிடைத்த விலைக்கு விற்கும் சூழலுக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

அதே நேரத்தில் தற்போதைய நிலையை சாதகமா பயன்படுத்திக்கொண்டு காய்கறிகளை நிறைய பேர் பதுக்குவதாகவும் விமர்சனம் செய்யப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதே கருத்தை தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார். விலைவாசி உயர்விற்கு மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், சர்வதேச சந்தை நிலவரம், உள்நாட்டு விளைச்சல் போன்றவை காரணமாக இருந்தாலும், பதுக்கல் முக்கியமான காரணமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ 150 ரூபாயாக உயர்ந்திருப்பதற்கு பதுக்கல் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. தக்காளியை பதுக்கியோ, பதப்படுத்தி வைப்பதோ கடினமான விஷயம். அது உற்பத்தி விலையை விட அதிக செலவு பிடிக்கக்கூடிய விஷயம் என்பதால் எந்தவொரு மாநில அரசும் பதப்படுத்துவதற்கு நினைப்பதில்லை. முடிந்தவரை அண்டை மாநிலங்களில் கிடைத்த விலைக்கு ஏற்றுமதி செய்வதை மாநில அரசுகள் விரும்பும்.

உணவுத்துறையில் பணவீக்க விகிதம் 9 சதவீதமாக இருந்தது தற்போது 3 சதவீதமாக குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்படியொரு நெருக்கடியான நிலையை இந்தியா சந்தித்ததில்லை. பல இடங்களில் மாற்றுப் பயிர்களை தேடி விவசாயிகள் செல்வதன் காரணமாகவும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களும் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகின்றன. 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது 180 ரூபாய் வரையிலும், 105 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 160 ரூபாய் வரையிலும், 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பாசி பருப்பு 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடிய விரைவில் 500 ரூபாயை தாண்டும் என்கிறார்கள். பெரும்பாலான சமையல் எண்ணெய் விலை உயர்ந்திருககின்றன. தக்காளியோடு சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்டவை விலை ஏற்றம் கண்டிருக்கின்றன.

கடந்த ஒரு மாதத்தில் உப்பு தவிர அனைத்து உணவுப்பொருட்களும் விலை ஏறியிருப்பதால் ஹோட்டல்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மின்சாரக் கட்டணம் வேறு உயர்த்தப்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் சில வாரங்களுக்கு தொடர்ந்தால் அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் உணவு பண்டங்களின் விலையை குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை ஏறுவதை தவிர்க்க முடியாது என்கிறார்கள்

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT