தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த அண்ணனை தம்பிகளே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. லாரி ஓட்டுனரான இவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக தன்னிடமிருந்த பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்தவுடன், அவருடைய தம்பி முத்துராஜ் என்பவரிடமிருந்தும் 3 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி, அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழுந்துள்ளார். இதனிடையே நல்ல தம்பியிடம் கடனாகக் கொடுத்த மூன்று லட்ச ரூபாயை தம்பியான முத்துராஜ் திருப்பிக் கேட்டுள்ளார். இதற்கு நல்லதம்பி பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
மேலும் சில்லாநத்தம் கிராமத்திலுள்ள பூர்வீக வீட்டையும் விற்பனை செய்து தனக்கு பணம் தர வேண்டும் என நல்ல தம்பி முத்துராஜிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், ஒன்றுவிட்டு சகோதரரான மற்றொரு முத்துராஜ் என்பவருடன் சேர்ந்து, இரவு நேரத்தில் அண்ணன் நல்ல தம்பியை பண்டாரப்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
பண்டாரம்பட்டி காட்டுப்பகுதியில் கிடந்த நல்ல தம்பியின் சடலத்தை தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் கண்டறிந்து, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். நல்லதம்பியை கொலை செய்த கொலையாளிகளை போலிசார் தேடி வந்தனர். அப்போது அவருடைய தம்பியான முத்துராஜ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததை அடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்ததாலும், கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்காததாலும் ஆத்திரத்தில் அண்ணனை கொலை செய்ததை முத்துராஜ் ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பெயரில் மற்றொரு சகோதரரான இன்னொரு முத்துராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம், தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.