தற்போது அனைவரது ஸ்மார்ட் ஃபோனிலும் ஓர் தவிர்க்க முடியாத செயலியாகவே மாறிவிட்டது whatsapp. புகைப்படங்கள், டாக்குமென்ட்கள், வீடியோக்கள் என நாம் பயன்படுத்தும் அனைத்தையும் பிறருக்கு எளிதாக இதில் பகிர முடியும். பொழுது போகவில்லை என்றால், பிறர் போடும் ஸ்டேட்டஸ்களைப் பார்த்து காலத்தைக் கழிக்கலாம்.
வாய்ஸ் நோட், வாய்ஸ் கால், வீடியோ கால் என சகல அம்சங்களையும் வாட்ஸ்அப் செயலி தன்னிடம் கொண்டுள்ளது. இதை எந்த அளவுக்கு நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறோமோ, அதே அளவுக்கு தீய செயல்களுக்கும் சிலர் பயன் படுத்துகிறார்கள்.
சமூக செய்தி தளமான whatsapp, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி இந்தியாவில் 29 லட்சம் பயனர்களின் கணக்குகளை, தடை செய்துள்ளது.
இதைப்பற்றி whatsapp நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"End-End என்கிரிப்ஷன் செய்யப்பட்ட செய்திகள் மற்றும் பயனர்களின் துஷ்பிரயோகத்தை தடுக்கும் சேவைகளில் whatsapp நிறுவனம் முன்னிலையில் இருந்து வருகிறது. பயனர்கள் எங்கள் தளத்தில் பாதுகாப்பாக இருக்க whatsapp சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது.
2021 IT விதிகளின்படி, 2023 ஜனவரி மாதத்தில் நாங்கள் எடுத்த நடவடிக்கை சார்ந்த விஷயங்களை இங்கே பகிர்ந்துள்ளோம். இதில் பயணிகளுடைய பாதுகாப்பு கருதி, கொடுக்கப்பட்ட புகார்களின் மீது, whatsapp நிறுவனம் எவ்வகையான நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் அடங்கும். இதன் அடிப்படையில் ஜனவரி மாதத்தில் மட்டும், துஷ்பிரயோகம் செய்த சுமார் 29 லட்சம் பயனர்களின் கணக்குகளை கணக்குகளை வாட்ஸ்அப் நிர்வாகம் தடை செய்துள்ளது."
ஜனவரி மாதத்தில் கிடைத்த மொத்தம் 1461 புகார்களில் 1337 புகார்கள் பிறரை தடை செய்வது பற்றியது. மீதமுள்ள புகார்கள் இன்ன பிற பிரச்சனைகள் சார்ந்தவை. இது தவிர வாட்ஸ்அப்பை துஷ்பிரயோக செயல்களுக்கு பயன் படுத்திய பலரையும் வாட்ஸ்அப் நிர்வாகம் தடை செய்துள்ளது.
பிறரை துன்புறுத்தும் வகையாக மெசேஜ் செய்வது மிகப் பெரிய குற்றமாகும். அதை தடுப்பதற்கு பல்வேறு வகையான யுக்திகளையும் கையாண்டு வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். தற்போது ஒரு தவறு நடப்பதற்கு முன்பாகவே சந்தேகத்திற்கு இடமான கணக்குகளை முடக்குவதும் எங்கள் கடமை தான் என்று கூறியுள்ளது.
வாட்ஸ் அப் செயலி வாயிலாக ஏதேனும் ஒரு துன்புறுத்தல் நடக்கிறதென்றால், அதை கண்டறிய மூன்று வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. துன்புறுத்தப் பட்டவர் நேரடியாக புகார் செய்தல், துன்புறுத்தும் விதமாக செய்தி அனுப்பும்போதே கண்டுபிடிக்கப்படுதல் மற்றும் கிடைக்கும் நெகட்டிவ் ஃபீட்பேக்குகளைப் பயன்படுத்தி துன்புறுத்தும் நபரை எளிதாகக் கண்டுபிடித்தல்.
எதிர்காலத்தில் இந்த முடக்கமானது AI தொழில்நுட்பம் மூலமாக இன்னும் துரிதமாக செயல்படும் என்று கூறப்படுகிறது.