ஆதித்யா எல்-1 விண்கணத்தில் சூரியனை துல்லியமாக படம் பிடிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள SUIT கருவி பற்றிய உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியனின் உண்மைகளை கட்டவிழ்க்கும் விதமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால், கடந்த செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல்-1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. சூரியனின் நடத்தைகளை கண்காணிப்பதற்காக 5 ஆண்டுகள் செயல்படும் திட்டமாக உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், இந்தியாவின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த விண்கலம் கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை நோக்கி முன்னேறி, கடந்த டிசம்பர் 8ம் தேதி விண்கலத்தில் இருந்த புற ஊதா இமேஜிங் தொலைநோக்கி மூலமாக சூரியனின் முழுமையான படங்களை வெளியிட்டு சாதனை படைத்தது. அதேபோல SUIT பேலோட் என்ற கருவி சூரியனை கண்காணிப்பதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. இது கடந்த நவம்பர் 20ஆம் தேதி தன் செயல்பாட்டைத் தொடங்கியது. மேலும் இந்த சாதனம் சூரியனின் குரோமோஸ்பியரின் மாறுதல்களை ஆய்வு செய்ய உதவும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
இந்த கருவி புனேவில் உள்ள வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. இந்த SUIT கருவி எடுத்த புகைப்படங்களைத் தான் சமீபத்தில் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. இந்த கருவி சூரியனை 200 - 400 nm வரம்பிற்குள் முழு உருவமாக வெற்றிகரமாக பதிவு செய்தது.
மேலும் இந்த கருவியானது சூரியனின் வளிமண்டலத்தில் பல அலை நீள வரம்பிற்குள் பல்வேறு விதமான பில்டர்களை பயன்படுத்தி மேலும் துல்லியமான படங்களையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் உதவியால் மக்கள் இதுவரை காணாத சூரியனின் புகைப்படங்கள் வெளிவந்து நம்மை ஆச்சரியப்படுத்தியது.
ஆதித்யா எல்-1 திட்டம் சூரியன் பற்றிய மேலும் பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.