AI தொழில்நுட்பத்தை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தினால் மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என ஐ.நா பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
என்னதான் உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பல நன்மைகள் ஏற்படும் என விவாதித்து வந்தாலும், அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தீமைகள் பற்றிய பேச்சுகளையும் நம்மால் காண முடிகிறது. ஏனென்றால் எந்த அளவுக்கு மனித குலத்திற்கு நன்மை புரியும் ஆற்றல் இந்தத் தொழில்நுட்பத்திற்கு இருக்கிறதோ, அதைவிட அதிகமாக தீமைகளை ஏற்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவாத கூட்டங்களை ஐ.நா சபை கடந்த சில மாதங்களாகவே நடத்தி வருகிறது.
அந்த வகையில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நியூயார்க் நகரில் பிரிட்டன் தலைமையேற்று நடத்தியது. இந்தக் கூட்டத்தின் தலைவராக பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகள் AI தொழில்நுட்பத்தில் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்து அவர்களின் கருத்தைத் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா, ஆலோசனைக் கூட்டம் முடியும் வேளையில் பேசும்போது, "செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும் சைபர் தாக்குதல்கள், ஏற்கனவே ஐ.நாவின் அமைதியை நிலைகுலைத்து விட்டதாகக் கருதுகிறேன். இவற்றை பயங்கரவாத அமைப்பினர் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆழமான உளவியல் பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படும். இதில் உயிர் சேதங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்படும் படங்கள், செய்திகள், உருவங்கள், தவறான தகவல்கள் போன்றவை மனித செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பத்தை நம் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தின் முக்கிய கொள்கைகளாக எடுத்துக்கொள்வோம். இத்தகைய ஆபத்துமிக்க தொழில்நுட்பங்கள் அரசாங்கங்களின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
இப்படி ஐ.நாவே பயப்படும் அளவுக்கு AI தொழில்நுட்பம் இருப்பதைப் பார்த்தால் சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் அதற்கான ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடுகளை அரசாங்கம் முறையாகக் கொண்டுவரும் என நாம் நம்புவோம்.