இந்தியாவில் இன்று முதல் டெல்லி மற்றும் மும்பை சந்தைகளில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபோன் 15 மாடல் போன்களை, வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 மாடல் போன்களை, கடந்த 12ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. 4 மாடல்களில் அறிமுகமான ஐபோன்களின் விலை, 79 ஆயிரத்து 900 ரூபாய் முதல், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 900 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில், இன்று முதல் புதிய மாடல் போன்கள் விற்பனைக்கு வந்தன. இதனை வாங்க டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் நேற்று மதியம் முதலே வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். இந்தியாவில் ஐபோன் 15 ஐ வாங்கிய முதல் வாடிக்கையாளர் ஒருவர் அனைத்து வகையான மாடல்களையும் அறிமுகம் ஆன உடனே வாங்குவது தனது வழக்கம் என்று கூறினார்.
இதே போன்று மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் முன்பு நேற்று மதியம் 3 மணியில் இருந்து சுமார் 17 மணிநேரம் காத்திருந்து மொபைல் போன் வாங்கியதாக மற்றொரு வாடிக்கையாளர் கூறியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஆப்பிள் ஐபோன்களை வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக ஐபோன் 15 மாடலை வாங்க சிறு நகரங்களில் இருந்து பெரு நகரங்களுக்கு செல்வதையும் காண முடிந்தது.